Home செய்திகள் பண்ணை இறால் ஏற்றுமதியால் ஆண்டுக்கு ரூ.14.55 கோடி வருவாய்…

பண்ணை இறால் ஏற்றுமதியால் ஆண்டுக்கு ரூ.14.55 கோடி வருவாய்…

by ஆசிரியர்

தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் சார்பில் இறால் பண்ணைகளில் நோய் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல் தொடர்பாக பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கருத்தரங்கு பட்டணம்காத்தான் அவின்கோ மகாலில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்து பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து மீன்பிடி பிரதான வாழ்வாதாரமாக விளங்குகிறது. கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 298.65 எக்டர் பரப்பளவில் 123 இறால் பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு 1,138 டன் இறால் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் ரூ.14.55 கோடி வருவாய் கிடைக்கிறது. இறால் உற்பத்தில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் நான்காம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சில பண்ணைகளில் இறால் வளர்ச்சிக்காக தடை செய்யப்பட்ட வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என பேசினார்.

பண்ணை இறால் வளர்ப்பு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பாக்ஜல சந்தி திட்ட இயக்குநரும், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநருமான ஜானி டோம் வர்கீஸ் பேசினார். மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் வரவேற்றார். உதவி இயக்குநர்(வடக்கு) அப்துல் ஜெய்லானி, இறால் பண்ணைகளில் இறால் வளர்ப்பின்போது தடை செய்யப்பட்ட நோய் எதிர் உயிர் பொருள் கொண்ட நுண்ணுயிரிகளை பயன்படுத்தாமல் நோய் தாக்கம் ஏற்படாத தரமான இறால் வளர்ப்பு குறித்து ஏற்றுமதி ஆய்வு நிறுவன உதவி இயக்குநர் ஜனநேசன் கூறினார். பண்ணை இறால் ஏற்றுமதிக்கான சந்தை மதிப்பிற்கேற்ப ஊட்டச்சத்து கொண்ட நோய் எதிர் உயிர் பொருள் பயன்படுத்துவது குறித்து கடல் உணவு பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல ஒருங்கிணைப்பாளர் அழகர் விளக்கம் அளித்தார். பதிவு செய்த நிறுவனங்களிடமிருந்து இறால் வளர்ப்பிற்கு தேவையான இடுபொருள்கள் வாங்குவது பாதுகாப்பனது என கடல்சார் நீர்வாழ் உயிரின ஆணைய முதுநிலை தொழில் நுட்ப உதவியாளர் பிரியா பேசினார்.

பண்ணை உரிமையாளர்களின் சந்தேகங்களுக்கு புதுக்கோட்டை மீன்வள உதவி இயக்குநர் குமரேசன், தூத்துக்குடி மீன்துறை ஆய்வாளர் சுப்ரமணியன், இராமநாதபுரம் வடக்கு மீன்துறை ஆய்வாளர் சாகுல் ஹமீது விளக்கம் அளித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!