மூக்கையூர் மீன்பிடி துறைமுக கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்…

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கிராமத்தில்ää ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் ரூ.113.90 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு முன்னேற்றத்தில் உள்ள மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இன்று (14.09.2018) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வினைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் தெரிவித்ததாவது: “இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கிராமப்பகுதியில் ரூ.113.90 கோடி மதிப்பில் 250 விசைப்படகுகள் மற்றும் 200 நாட்டுப்படகுகள் நிறுத்திட ஏதுவாக புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இத்துறைமுகத்தில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன்ஏலக் கூடம், மீன்களை காயவைப்பதற்கான தளம், வலை பின்னும் கூடம், மீனவர்கள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிலை குறித்து இன்றைய தினம் கள ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தற்போது வரை 84% கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மார்ச் 2019க்குள் இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் 100ம% நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் திரு.ஜானி டாம் வர்கீஸ், மீன்வளத்துறை செயற்பொறியாளர் திரு.பி.முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் திரு.ஜி.நாகரத்தினம், மீன்வளத்துறை துணை இயக்குநர் திரு.காத்தவராயன், உதவி இயக்குநர் திரு.சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.