Home செய்திகள் ஆண்டு கணக்கில் அடிப்படை வசதி இல்லாமல். அவதிப்படும் பாலக்கரை ஊராட்சி..

ஆண்டு கணக்கில் அடிப்படை வசதி இல்லாமல். அவதிப்படும் பாலக்கரை ஊராட்சி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் அருகே பால்கரை ஊராட்சியில் கடந்த ஓராண்டாக அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் ராமநாதபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பால்கரை ஊராட்சி கீழக்கரை செல்லும் பிரதான சாலை ஓரம் உள்ளது. பால்கரை, அச்சடிபிரம்பு, கண்ணாரேந்தல், கோவிந்தனேந்தல் கிராமங்களை பால்கரை ஊராட்சி உள்ளடக்கி உள்ளது.

இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 900க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் பிரதான தொழிலாகவும், கரி மூட்டம் மாற்றுத் தொழிலாகவும் உள்ளது. குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து கிராமத்தலைவர் கந்தவேல் கூறுகையில், ‘இராமநாதபுரத்திற்கு மிக அருகில் பால்கரை ஊராட்சி உள்ளது. ராமநாதபுரம் & கீழக்கரை செல்லும் பிரதான சாலையில் இருந்து துவங்கும் ஊராட்சி சாலை 3 கி.மீ., தூரத்திற்கு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இச்சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் விநியோகமின்றியும், குழாய்கள் சேதமடைந்து கிடக்கிறது. தெரு விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்துள்ளதால் வேலைக்கு சென்று விட்டு இரவில் தனியாக வீடு பெண்கள் அச்சமடைந்துள்ளனர். மாணவர்கள் படிக்க இயலாமல் சிரமம் அடைந்துள்ளனர். 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்டு மேல்நிலை தொட்டியில் தண்ணீர் நிரப்புவது இல்லை. அத்திபூத்தாற்போல் நிரப்பப்பட்டு திறந்து விடப்படும் தண்ணீரை பெண்கள் தவம் கிடந்து பிடிக்கின்றனர். குடிநீர் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து டேங்கர் லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தண்ணீரை குடம் ரூ.10 கொடுத்து வாங்கும் பரிதாப நிலை தொடர்கிறது. தண்ணீருக்காக மாதம் ரூ.500 வரை செலவிட வேண்டியுள்ளது. ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கப்படுவதில்லை. குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிகள், ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பாக மக்கள் குறைதீர் நாள் முகாமில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் முறையிட்டபோது உள்ளாட்சி தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் தேர்வு செய்தால் மட்டு«ம் அடிப்படை வசதி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அலட்சிய பதில் கூறுகின்றனர்’ என்றார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பால்கரை ஊராட்சியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!