முதுகுளத்தூர் அருகே விபத்து, மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவி பலி 23 பேர் படுகாயம்

முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகள் சுமித்ரா(வயது 16). முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் பள்ளிக்கு செல்வதற்காக மினி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில் ஆதனக்குறிச்சி சாலையில் மினி பஸ் சென்றபோது திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து அருகில் உள்ள பள்ளத்தில் உருண்டது. இதில் மாணவி சுமித்ரா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த திருப்பதி(37), முத்துநாகு(65), திருமலாதேவி(22), முத்துக்கார்த்திக்(14), வேம்பி(60), சவுமியா(14), ஜனனி(2), மீனாட்சி(5), ராக்கம்மாள்(60), நேதாஜி(17), கனிமுருகன்(17), கற்பகம்(40), போஸ்(42), கமலா(14), சுப்பிரமணி(48), சதுரங்கபாணி(50) உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். உடனே இவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவி உத்தரவின்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவி சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து மினி பஸ் டிரைவர் பிரபாகரன்(27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.