Home செய்திகள் அரசின் விதிகளை பின்பற்றாத கனிம வள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும்; முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்..

அரசின் விதிகளை பின்பற்றாத கனிம வள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும்; முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்..

by Abubakker Sithik

அரசின் விதிகளை பின்பற்றாத கனிம வள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும்; முன்னாள் எம்எல்ஏ கே.ரவி அருணன் வலியுறுத்தல்..

அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத கனிமவள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் எம்எல்ஏவும், தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான கே. ரவி அருணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் விதிகளை மீறி அதிவேகமாக இயக்கப்பட்டு தினமும் விபத்துக்களை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், தென்காசி மதுரை சாலையில் இலத்தூர் விலக்கு பகுதியில் பயணிகள் பேருந்து மீது கனிமவள லாரி அதி வேகமாக வந்து மோதி பல உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. இதில் சிவராம பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த சுந்தரி என்ற பெண்ணும் அவரது மூன்று வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள். சங்கரன்கோவிலை சேர்ந்த பெண்மணி ஒருவரும் பலியாகி இருக்கிறார். செல்வி என்பவர் கணவனை இழந்தவர் என்று சொல்லப்படுகிறது. அவரது இன்னொரு குழந்தை வீட்டில் இருக்க அவருடன் பயணிக்காதால் உயிர் பிழைத்திருக்கிறது. அந்த குழந்தை தற்போது தாய் தந்தையரையும் சகோதரனையும் இழந்துள்ளது. அந்தக் குழந்தையின் உயர்கல்வி வரையிலான செலவு மற்றும் வேலை வாய்ப்புக்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலும் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். கனிம வள லாரிகளை இயக்குபவர்கள் தமிழக அரசின் எந்த விதிகளையும் கடைப்பிடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்து இருக்கிறார்கள். அதிக அளவு பாரம் ஏற்றுவது, அதிக வேகத்தில் செல்வது, சாலைகளை சேதப்படுத்துவது, குடிநீர் குழாய்களை உடைப்பது போன்றவை அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. எனவே அதிகாரிகள் இரும்புக்கரம் கொண்டு கனிமவள லாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கனவே 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட லாரிகளுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு கோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டிருக்கிறது. அந்தத் தடையை நீக்குவதற்கு அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகவே இருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாது அரசு அந்தத் தடையை நீக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு ஏற்றி செல்வதை அடியோடு தடுத்து நமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கே. ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!