Home செய்திகள் இன்னும் சில இடங்களில் வாழ்கிறது மனிதநேயம்

இன்னும் சில இடங்களில் வாழ்கிறது மனிதநேயம்

by mohan

உசிலம்பட்டி யில் பஸ் ஸ்டாண்ட் நடுவே பூக்கடை வைத்து நடத்தி வரும் செல்லத்துரை அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். மறு நாள் காலை கடையை திறக்க வரும்போது கட்டி தொங்கப்படவிட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண் டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார். இது கடந்த 15 வருடங்களாக நடந்து வரும் சங்கதி.

இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடாம். எந்த பிஸியான நாட்களானாலும், வியாபாரத் திற்காக தொடுக்கும் மாலைகளில் கண்டிப்பாக 4 மாலைகளை இரவில் விட்டுச்செல்வதற்காக முன் கூட்டியே எடுத்துவைத்துவிடுகிறார் .

செல்லத்துரை யிடம் பேசினோம். “தினமும் பூ வியாபாரத்தில் ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும். இதை வைத்துதான் குடும்பத்தை கவனித்து வருகிறேன். திருமணம் போன்ற முகூர்த்த நாட்களில் கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கும். .எந்த பொருள் வாங்கனும்னாலும் பக்கத்தில் இருக்கும் மதுரைக்கு போய்தான் வாங்கணும். ராத்திரி 10 மணிக்கு மேல் எந்த கடையும் திறந்திருக்காது. ரொம்ப அவசரம்னா இரவில் மதுரை போய்தான் அந்த சாமான்கள் வாங்கிட்டு வரணும்.

உசிலம்பட்டியில் ராத்திரி 10 மணிக்கு மேல் யாராவது இறந்து விட்டால் அவர் களது உடலுக்கு போடுவதற்கு மாலை கிடைக்காது. உயிர் போன பிறகு உடலுக்கு மாலை போட்டு விளக்கு ஏற்றி வைப்பதுதான் அந்த உயிருக்கு செய்யும் முதல் மரியாதை. ஆனால் மாலை கூட இல்லாமல் மறு நாள் காலை பூக்கடை திறக்கும் வரை வெத்து உடம்போடு காத்திருப்பது பெரிய கொடுமை. ஒருமுறை பேருந்தில் பயணத்தில் எனது நண்பர்கள் இதைச் சொல்லி வருத்தப்பட்டனர். அது என் மனதில் வருத்தத்தை தந்தது.

கூடவே ஒரு யோசனை தோணுச்சு. அதுதான் இப்படி 15 வருடமா செய்து வர்றேன். தினமும் பூ வியாபாரம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது தனி யாக 4 மாலைகளை கடைக்கு வெளியே தொங்க விட்டுட்டு போவேன். ராத்திரி நேரத்தில யாராவது இறந்து போயிட்டா மாலை வாங்குவதற்கு பூக்கடைகளை தேடறவங்க என் கடையில் தொங்குற மாலைகளில் தேவையானதை எடுத்துப் போய் பிரேதத்துக்கு போடுவாங்க. ஆரம்பத்தில இந்த விஷயம் தெரியாததால் காலையில பார்க்கும்போது மாலைகள் அப்படியே இருந்தது.

பிறகு பலருக்கும் இது தெரிஞ்சதால் இப்ப பெரும்பாலும் மாலைகள் இருக்காது. முகம் தெரியாத ஒரு மனிதரின் உடலுக்கு நாம தொடுத்த மாலையால மரியாதை கிடைச்சதே என்ற திருப்தி அன்னிக்கு முழுக்க மனசில இருக்கும். ராத்திரி மாலையை எடுத்துட்டு போன சில பேர் காலையில் வந்து மாலைக்கு காசு கொடுப்பாங்கவாங்கிகொள்வேன்ஏழைகள்என்றால்விட்டுவிடுவேன். தொங்க விட்டுப் போன மாலைகளில் ஏதாவது மிச்சம் இருந்தா அதை மறுநாள் வியாபாரத்துக்கு வச்சுக்க மாட்டேன். முதல் காரியமாக அதை குப்பை தொட்டியில் போட்டுட்டு புதுசா மாலை கட்ட ஆரம்பிச்சுருவேன்.

என்னோட ஆத்ம திருப்திக்காக இதை 15 வருசமாக செஞ்சுக்கிட்டு வர்றேன். ஒரு மாலை 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் வரை ஒரு நாளைக்கு செலவாகும். காசு, பணமா சார் முக்கியம். மாட மாளிகையில பொறந்தாலும் குடிசையில் பிறந்தாலும் இறப்புங்கறது எல்லாருக்கும் பொதுவானது. கஷ்ட நஷ்டங்களை பார்த்து கண் மூடுற மனுஷன், அவனுக்கான மரியாதை இந்த மாலை. அதை முகம் தெரியாத யாருக்கோ என்னால செய்ய முடியுது என்பதே எனக்கு ஆத்ம திருப்தி தர்ற விஷயம்” என்கிறார் சிறு புன்னகையுடன் பூ வியாபாரி செல்லத்துரை. பழகியவர்களுக்கே உதவி செய்ய பர்ஸை திறக்காத மனிதர்களுக்கு மத்தியில், வருமானத்தை புறந்தள்ளி முகம் தெரியாத மனிதர்களின் மேல் அன்பை செலுத்தும் செல்லத்துரை பாராட்டத்தகுந்த மனிதர்தான்.இவரை பாரட்ட   98654 30222

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com