Home செய்திகள் விவசாயியிடம் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது..

விவசாயியிடம் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது..

by Abubakker Sithik

தென்காசியில் தரிசு நிலம் என சான்றிதழ் வழங்க 5000 ரூபாய் லஞ்சம்; வருவாய் ஆய்வாளர் கைது..

தென்காசியில் விவசாயியிடம் தரிசு நிலம் என சான்றிதழ் வழங்க 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை (ஆர்.ஐ) லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தென்காசி அருகேயுள்ள மத்தளம் பாறையைச் சேர்ந்த விவசாயி கதிரேசன் (34). இவர் தனது நிலத்திற்கு தரிசு நிலம் என சான்றிதழ் பெற தென்காசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இது குறித்து கதிரேசன் தாலுகா அலுவலகத்தில் கேட்ட போது வருவாய் அலுவலரை சந்திக்கும் படி கூறியுள்ளனர். இதையடுத்து தென்காசி வருவாய் அலுவலர் தர்மராஜை நேரில் சந்தித்து தனக்கு தரிசு நில சான்றிதழ் வேண்டும் என விவசாயி கதிரேசன் கூறியுள்ளார். வருவாய் அலுவலர் மத்தளம்பாறை கிராம நிர்வாக அலுவலரை சந்திக்கும்படி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து கதிரேசன் சான்றிதழ் குறித்து பேசியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் நிலத்தை பார்வையிட்டு தரிசு நிலம் சான்றிதழ் வழங்க வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்து விட்டு, கதிரேசனிடம் வருவாய் அலுவலரை சந்திக்கும் படி கூறியுள்ளார். கதிரேசன் தென்காசி வருவாய் அலுவலர் தர்மராஜை சந்தித்த போது, தரிசு நிலம் சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ.20,000 தர வேண்டும் என தெரிவித்துள்ளார். கதிரேசன் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என தெரிவிக்கவே, ரூ.5,000 தந்தால் தான் சான்றிதழ் தரமுடியும் என வருவாய் அலுவலர் தர்மராஜ் கூறிவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த கதிரேசன் இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின் படி கதிரேசன் ரசாயன பவுடர் தடவிய ரூ.5,000 பணத்தை தென்காசி வருவாய் அலுவலர் அலுவலகம் சென்று அங்கிருந்த வருவாய் அலுவலர் தர்மராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால்சுதர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தர்மராஜ் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com