”உச்சநீதிமன்றத் தீர்ப்பினை ஏற்று தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணில் இருந்து பிரித்து அகற்ற வேண்டும். அந்த இடத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 தியாகிகள் நினைவாக நினைவுச்சின்னம், மணி மண்டபம் எழுப்ப வேண்டும்.” என தமிழர் தேசியக் கொற்றம் கட்சியின் தலைவர் வியனரசு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய வியனரசு, “கடந்த 26 ஆண்டுகால ஸ்டெர்லைர் எதிர்ப்பு போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது உச்சநீதிமன்றம். மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தீர்ப்பினை தந்த உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு ஒட்டு மொத்த தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வழக்கறிஞர்களின் வாதத் திறமையால் ஸ்டெர்லைட் ஆலையின் பொய் மூட்டைகள் தவிடு பொடியாகி உள்ளது. இந்த தீர்ப்பினை ஏற்று தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை பிரித்து மண்ணில் இருந்து அகற்றிட வேண்டும்.
அந்த இடத்தில் கடந்த மே-22-ல் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 தியாகிகளின் நினைவாக நினைவுத் தூண், மணி மண்டபம் கட்டிட வேண்டும். அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும், இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக அப்பாவி மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், மக்கள் இந்த அரசு மீது நம்பிக்கை கொள்வார்கள். இல்லாவிட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., அரசிற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” என்றார்.
You must be logged in to post a comment.