Home செய்திகள் புதிய மொந்தையில் பழைய கள்! – சிறுபான்மை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள் குறித்து எஸ்டிபிஐ கட்சி விமர்சனம்..

புதிய மொந்தையில் பழைய கள்! – சிறுபான்மை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள் குறித்து எஸ்டிபிஐ கட்சி விமர்சனம்..

by Askar

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில பிரதிநிதிகளை   அழைத்துப் பேசி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி 09ம் தேதி சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து, கடந்த காலங்களில் திமுக அரசு செய்த, செய்து வந்த சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்தும், சில வாக்குறுதிகளையும் அப்போது அவர் அறிவிப்பாக வெளியிட்டார். சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தவரை அழைத்து பேசியது போன்று முஸ்லிம்களையும் அழைத்து பேச வேண்டும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என எஸ்டிபி கட்சி அப்போது வலியுறுத்தியது. இந்த கூட்டம் எதிர்வரும் தேர்தலுக்கான கண்துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல், சிறுபான்மை சமூக மக்கள் தொடர்ச்சியாக முன் வைக்கும் கோரிக்கைகளை உண்மையிலேயே நிறைவேற்றும் கூட்டமாக, சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தின் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் கூட்டமாக அது அமைய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில்தான் நேற்றைய தினம் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளை முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, திமுக அரசு கடந்த காலங்களில் செய்த திட்டங்கள் குறித்து பேசியதோடு, சிலவற்றை வாக்குறுதிகளாகவும் அறிவித்துள்ளார். ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் ஆன போதும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகள் மீது இதுநாள் வரையில் எவ்வித அக்கரையும் செலுத்தாத, முஸ்லிம் சமூகத்திற்கான எந்தவித பொருளாதாரத் திட்டங்களையும் செயல்படுத்தாத திமுக அரசு, இந்த கூட்டத்தின் மூலமாக முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த கால திட்டங்கள் குறித்தும், ஏற்கனவே கிறிஸ்தவ சமூகத்தினரை அழைத்து பேசிய போது அறிவித்த  திட்டங்களையும், சில சிறிய கண் துடைப்பு திட்டங்களையும் மட்டுமே அறிவிப்பு செய்துள்ளார். ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்கிற ரீதியில், ஏற்கனவே உள்ள மற்றும்  சரிவர செயல்படுத்தப்படாத பழைய திட்டங்களை, கூட்டத்தில் கலந்துகொண்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வர் திரும்ப எடுத்து வைத்துள்ளார். முதல்வரின் அறிவிப்பில் பெரும்பாலானவை வாக்குறுதி அறிவிப்புகளாக உள்ளன. ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வக்பு வாரியம் மூலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகள், வாழ்வாதாரம், பிரதிநிதித்துவம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் இன்னும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. ஐந்து சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை, அரசின் உயர் பதவிகளில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவ கோரிக்கை, நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் முழுமையான விடுதலை கோரிக்கை, முஸ்லிம்களுக்கான சமூக நலத்திட்டங்கள், பொருளாதார திட்டங்களை மேம்படுத்த சச்சார் கமிட்டி போன்றதொரு கமிட்டியை அமைக்கும் கோரிக்கை என்பன உள்ளிட்டவை பாராமுகமாகவே உள்ளன. எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதிற்கொண்டு நடத்தப்பட்ட இந்த கூட்டம் தாமதமான ஒன்றாக இருந்தாலும் கூட, தமிழக முதல்வர் அவர்கள் இந்த கூட்டத்தில் வாக்குறுதிகளாக அறிவித்த சில திட்டங்களையாவது, தேர்தல் செயல்பாடுகளாக அல்லாமல், மக்கள் நல செயல்பாடாக கருத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com