Home செய்திகள் எவ்வளவு ‘கொடூரமான’ பாகுபாடுகள் இருந்தாலும், தற்கொலை வேண்டாம்:

எவ்வளவு ‘கொடூரமான’ பாகுபாடுகள் இருந்தாலும், தற்கொலை வேண்டாம்:

by Askar

எவ்வளவு கொடூரமான பாகுபாடுகள் இருந்தாலும் தற்கொலை முடிவுக்குப் போகாதீர்கள் என்று மாணவத் தலைமுறைகளைத் கேட்டுக்கொள்கிறேன்.

பாகுபாடுகளுக்கு முடிவுகட்டுவதற்கான போராட்டங்களோடு உங்களை இணைத்துக்கொண்டு அந்தக் கரங்களுக்கு வலிமை சேருங்கள், உங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளாதீர்கள்.

சென்னை ஐஐடி வளாகத்தில் பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும் நாங்கள் சொல்லவில்லை. விசாரணை நடத்தப்பட வேண்டும், அந்த விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும், விசாரணை நேர்மையாக நடைபெற ஏதுவாக முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், உண்மைகள் வெளிவர வேண்டும், பாகுபாடுகள் காட்டப்பட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். ஆனால் எதிர்வாதம் செய்கிறவர்கள், குற்றமே நடக்கவில்லை என்று இப்போதே மறுப்பது ஏன்?

தனது பெயர்தான் பிரச்சனையாக இருக்கிறது என்று பாத்திமா குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அவருடைய தந்தை. அலிகார் ஐஐடி-யில் ஏற்கெனவே இடம் கிடைத்தும், வட மாநிலங்களில் நடக்கும் கும்பல் படுகொலை சம்பவங்களைப் பார்த்து, தமிழகம் அத்தகைய மதப் பகைமை கிளறப்படாத மாநிலமாக இருப்பதால் சென்னை ஐஐடியில் பயில மகளை அனுப்பியதாகக் கூறியிருக்கிறார். அந்த பெருமைக்குரிய வரலாறு கொண்ட தமிழகத்தில் இன்றைக்கு அதைச் சீர்குலைக்க ஊடுருவிய சக்திகள் யார், ஊடுருவியது எப்படி?

உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் ஆணையை மத்திய அரசு பிறப்பித்தபோது அதை எதிர்த்த நிர்வாகங்களில் சென்னை ஐஐடியும் ஒன்று என்ற வரலாறும் இருக்கிறது.

உயர் கல்வி வளாகங்களில் இத்தகைய சோகங்கள் அடிக்கடி நிகழ்வது பற்றிய செய்திகளின் பின்னணியில் 2007ல் மத்திய அரசாங்கமே நீதிபதி தோரட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் எந்த அளவிற்கு சாதியப் பாகுபாடுகள் இருக்கின்றன, எப்படியெல்லாம் அந்தப் பாகுபாடுகள் வெளிப்படுகின்றன என்று கண்டறிந்து தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

உதாரணமாக, 72 சதவீத தலித், பழங்குடி சமூக மாணவர்கள் தங்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாக புகார் செய்துள்ளனர், 69 சதவீத மாணவர்கள் தங்களால் இத்தகைய பிரச்சினைகள் தொடர்பாக ஆசிரியர்களையோ அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள், மூன்றில் ஒரு பகுதியினர் சாதி அடிப்படையிலேயே தாங்கள் வேறுபடுத்தப்படுவதாகக் கூறியிருக்கிறார்கள், “நீ என்ன சாதி” என்று தேர்வுக் கண்காணிப்பாளர்கள் கேட்டதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், பிராக்டிகல் வகுப்புகள், வைவா போன்றவற்றில் தங்களுக்கு வேண்டுமென்றே போதுமான நேரம் அளிக்காமல் நெருக்கடி தரப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் மத்திய அரசிடம் உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையிலேயே உள்ள தகவல்கள்.

இந்தப் பாகுபாடுகள் மாணவர்களுக்கு எதிராக ஆசிரியர்களிடமிருந்து வருபவை மட்டுமேயல்ல. அந்த நிறுவனங்களில் பேராசிரியர்களே கூட சாதியப் பாகுபாடுகளுக்கு உள்ளாகி வந்திருக்கிறார்கள். சென்னை ஐஐடியில் முனைவர் வசந்தா கந்தசாமி நடத்திய போராட்டத்தை மறந்துவிட முடியாது. அதற்காகவே அவருக்கு அன்று கலைஞர் தலைமையிலான தமிழக அரசாங்கம் வீராங்கனை சமந்தா விருது அளித்து கௌரவித்தது.

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை கூறுவதற்கான ஏற்பாடுகள் வேண்டும், பிரச்சினை சரியாகிவிடும் என்பது மேலோட்டமான கண்ணோட்டம். உண்மையில் தேவைப்படுவது மாணவர்கள் தங்களுடைய சொந்தப் பிரச்சினைகள் முதல், சமூகப் பிரச்சினைகள் வரை தயக்கமின்றி உரையாடுவதற்கும், விவாதிப்பதற்கும் ஏற்ற கல்வி வளாக ஜனநாயகச் சூழல்தான். மாணவர் பேரவைகள் அதற்காகவே அமைக்கப்படவேண்டும். பல உயர்கல்வி நிறுவனங்கள் அத்தகைய பெயர்களை அமைக்க மறுப்பது ஏன்?

இத்தகைய கலந்துரையாடலுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தோரட் குழுவின் முக்கியமான பரிந்துரை. ரோகித் வெமுலா தினம் கடைப்பிடிக்கப்பட்டு இத்தகைய சிந்தனைகள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முற்போக்கான மாணவர் அமைப்புகள் முன்வைக்கின்றன. இத்தகைய சூழல்கள்தான் மன இறுக்கங்களைத் தளர்த்தி இயல்பாகப் பங்கேற்க வைக்கும், கெடுபிடியற்ற சுதந்திர உணர்வோடு படிக்க வைக்கும்.

ஆனால், சென்னை ஐஐடியில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் முடக்கப்பட்டது, பின்னர் போராட்டத்தால் அது மீட்கப்பட்டது. மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி, கரும்பலகைகளுக்கு அப்பால் எதையும் யோசிக்கக் கூடாது, பேசக்கூடாது என்ற மனநிலை காரணமாக இத்தகைய ஏற்பாடுகளை நிர்வாகங்கள் செய்வதில்லை. கல்வி வளாகங்களில் அரசியலையும் சமூக நிகழ்வுகளையும் அலசியவர்கள்தான் சிறந்த தலைவர்களாக உருவானார்கள். தங்களுடைய வளாகங்களிலிருந்து அத்தகைய தலைவர்கள் உருவாவதை உயர்கல்வி நிறுவன நிர்வாகங்கள் தடுப்பது ஏன்?

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com