
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில், சிதிலமடைந்த நிலையில், கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜவ்வாதுமலையில் உள்ள மலைகிராமங்களில், திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு மையம் சார்பில், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, அப்பகுதியில் உள்ள தொல்லியல் சார்ந்த கல்வெட்டு, கட்டடம், கோட்டை, குள்ளர் வாழ்ந்த குகை, போன்ற வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, ஜவ்வாதுமலை உச்சியில், அடர்ந்த வனப்பகுதியான கீழ்பட்டில், மலை முகட்டில் சிதலமடைந்த நிலையில், கோட்டையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், கருங்கல் கட்டடம், இதை ஒட்டி அகழி, அதன் அருகே, 200 மீட்டர் அளவுக்கு கோட்டை சுவர் உள்ளது. கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் தற்போது, புதுப்பாளையம், கீழ்குப்பம் மட்டவெட்டு ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கோட்டை, சங்க இலக்கியமான மலை படுகடாம் என்ற நூலில், செங்கத்தை, நன்னன் சேய் நன்னன் என்ற அரசன் ஆண்ட பகுதியில், நவிரமலை மீது, கோட்டை அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நூலில் குறிப்பிட்டுள்ள, கோட்டை இதுவாக இருக்கலாம் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே, செங்கத்திலுள்ள ஸ்ரீ அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோவில் கல்வெட்டுகள், ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் அடிப்படையில் வைத்து, ஆய்வு செய்ததில், இவை உறுதிப்படுத்தும் படி உள்ளது என, வரலாற்று ஆய்வு மைய செயலர் பாலமுருகன் தெரிவித்தார். வரலாற்று ஆய்வாளர்கள் பழனிச்சாமி, திருப்பதி ,குமார் மற்றும் பெருமாள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.