அசத்தும் இரட்டையரைபாராட்டி நெகிழ்ந்த கலெக்டர்

அனைத்து மாநிலங்களின் தலைநகர் பெயர்களை தொய்வின்றி சொல்லி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த சகோதரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த தம்பதி ராமசாமி- பவானி. இவர்களுக்கு ஹரிஷித், ஹர்ஷித் ஆகிய இரட்டை பிள்ளைகள் உள்ளனர். இரண்டே கால் வயதான இந்த சிறுவர்கள், அதிக நினைவாற்றலை கொண்டிருப்பதை உணர்ந்த பவானி, இவர்களுக்கு மாநிலங்களின் தலைநகர், சின்னம், திருக்குறள், தமிழ் மாதம் என பல்வேறு முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதனை அப்படியே கற்றுக் கொண்ட சிறுவர்கள், சர்வ சாதாரணமாக ஒப்பித்தனர். இந்த சிறுவர்கள், தங்களின் நினைவாற்றலுக்காக ஹரியானா மாநிலம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.இதனை அறிந்த ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ், சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார். சிறுவர்களின் நினைவாற்றலை கண்டு வியந்ததாக ஆட்சியர் நெகிழ்ச்சியுடன் கூறினார். இது குறித்து சிறுவர்களின் தாய் பவானி கூறியதாவது: தான் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றுவதால் அந்த குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது போல இவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தேன். அவர்கள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கன்வாடி சிறுவர்களையும் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைக்க வேண்டும் என்பதே ஆசை என்றார்.