
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஆபஜெ அப்துல் கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே பேக்கரும்புவில் உள்ள கலாம் தேசிய நினைவிடத்தில் இம்மையில் புகழ்பெற்ற கலாம் மறுமையிலும் சிறக்க வேண்டி கலாம் குடும்பத்தினர், ராமேஸ்வரம் ஜமாத்தார், உலமாக்கள் பிரார்த்தனை செய்தனர்.இதனை தொடர்ந்து கலாம் நினைவிடத்தில் ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கலாம் குடும்பத்தினர் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவினால் திறக்கப்படாமல் இருந்த கலாம் நினைவிடம் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ண மயமாக காட்சி அளித்தது. ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், மக்கள் மனம் கவர்ந்த அப்துல் கலாம் மறைவிற்கு பின்னரும் அனைவருக்கும் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறார். அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. அவரது வழியை பின்பற்றி இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும். ராமேஸ்வரம் பேக்கரும்பிலுள்ள அவரது நினைவிடம் மத்திய அரசு மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படிஆர்டிஓ., வினால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 லட்சம் பார்வையாளர்கள் கலாம் நினைவிடத்தைப் பார்வையிட்டுள்ளனர். அவரது ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது புகழை போற்றுவோம். என்றார்.கலாம் இன்டர்நேஷனல் அறக்கட்டளை இயக்குநர் ஷேக் சலீம் கூறுகையில், தாத்தா (கலாம்) வாழ்ந்த காலம் மட்டுமல்ல மறுமையிலும் சிறந்தோங்க இறைவனை பிரார்த்தித்து துவா செய்தோம். கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் அவரது லட்சியத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் அனைத்து நிகழ்ச்சிகளை செய்து வருகிறோம். தமிழகத்தை பசுமை தமிழகமாக மாற்ற மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்று ஒருவருக்கு ஒரு மரம் என்ற நிலையை உருவாக்கி பசுமை இந்தியாவாக மாற்ற பாடுபடுவோம் என்றார். மத்திய அரசு அறிவித்த கலாம் அறிவு சார் மையம், கலாம் தேசிய நூலகம் ஆகியவற்றை விரைவில் தொடங்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
You must be logged in to post a comment.