கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி முஸ்லிம் லீக்,அ.தி.மு.க. பா.ஜ.க,எஸ்.டி.பி.ஐ . கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் ஹபீப் ரஹ்மான் தலைமையில் மன்றத்தின் கூட்டரங்கில் நடந்தது. இதில் துணை தலைவர் ராசைய்யா முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயர்வு விகிதம் குறித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் லீக்,அ.தி.மு.க, பாஜக, எஸ்.டி.பி.ஐ, அ.ம.மு.க கவுன்சிலர்கள் 14 பேர் பேச அனுமதி கேட்டனர். இதற்கு தலைவர் அனுமதி மறுக்கவே கூட்டரங்கின் மையப் பகுதியில் பதாகைகளை கையில் ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீதமிழக அரசால் சமீபத்தில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், தொடர்ந்து, நகராட்சி வாயில் முன்பு அமர்ந்து சொத்து வரியை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்தைக் கேட்காமலே தீர்மானம் நிறைவேற்றிய நகராட்சி தலைவரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.பின்னர் இது குறித்து எஸ்டிபிஐ கவுன்சிலர் யாசர்கான் நிருபர்களிடம் கூறுகையில், சொத்து வரி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என்றார். இந்த கூட்டம் எவ்வித விவாதமுமின்றி 3 நிமிடத்தில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் கமிஷனர் ரவிச்சந்திரன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.