Home செய்திகள் சுரண்டை அருகே மினி பஸ்ஸை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு.

சுரண்டை அருகே மினி பஸ்ஸை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு.

by mohan

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இரவு நேரத்தில் கிராமத்திற்குள் செல்லாமல் நடுவழியில் பெண் பயணியை இறக்கி விட்டுச் சென்ற மினி பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சுரண்டையில் இருந்து கீழக் கலங்கலுக்கு தனியார் மினி பஸ் இயக்கப்படுகிறது. சுரண்டை, பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், லட்சுமிபுரம் வழியாக இந்த பஸ் சென்று வருகிறது.இந்நிலையில் சுரண்டையில் இருந்து பெண் பயணி ஒருவர் மரியதாய்புரம் செல்வதற்காக இரவில் பஸ் ஏறியுள்ளார். மரியதாய்புரம் விலக்கு பகுதிக்கு வந்தபோது, ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்குள் செல்லாமல், வேறு பயணிகள் இல்லை என்ற காரணம் கூறி அந்தப்பெண் பயணியை, மரியதாய்புரம் விலக்குப் பகுதியில் மெயின் ரோட்டில் இறக்கி விட்டு சென்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் இரவு நேரத்தில் நடந்து ஊருக்குச் சென்ற அந்தப் பெண் கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த கிராமத்தினர் இந்த மினி பஸ் கிராமத்திற்குள் வந்தபோது அதனை சிறைபிடித்தனர். பஸ்ஸில் இருந்த பிற ஊர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளை தனித்தனியாக ஆட்டோவில் ஏற்றி  கிராமத்தினரின் செலவிலேயே அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, எந்த நேரமானாலும் கிராமத்திற்குள் வருவதாக இருந்தால் மட்டுமே தங்கள் கிராமத்திற்குள் வரவேண்டும் எனவும், எக்காரணத்தைக் கொண்டும் பயணிகளை விலக்கு பகுதியில் இறக்கி விடக்கூடாது எனவும் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் உறுதியாக தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த பஸ் உரிமையாளரிடம் டிரைவர் மற்றும் கண்டக்டர் குறித்து புகார் தெரிவித்து பஸ்சை விடுவித்தனர். இச்சம்பவம் மரியதாய்புரம் மற்றும் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com