
கடையநல்லூரில் புதிய தாலுகா அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு 04.02.21 வியாழக்கிழமை திறக்கப்பட இருந்த நிலையில் திறப்பு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எம்எல்ஏ தெரிவித்துள்ளதாவது: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்குட்பட்ட 2 நகராட்சிகள், 3 பேரூந்துகள் மற்றும் 30 மேற்பட்ட கிராமங்களின் மக்கள் பயன்படுத்தும் தாலுகா அலுவலகத்தை தமிழக அரசு போக்குவரத்து வசதி இல்லாத வனப்பகுதியில் அடிக்கல் நாட்டியதை தடுத்து நிறுத்தி மக்கள் ஒத்துழைப்போடு மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கருப்புச் சட்டை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து போராடி கடையநல்லூர் புதிய தாலுகா அலுவலகத்தை நகர எல்லையில் அமைய அனுமதி பெற்றதோடு, கட்டிட பணி தொடங்க நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில் நானே எதிர் மனுதாராக ஆஜராகி தடையை அகற்றி நீதி மன்றத்திலும் வெற்றி கண்டு புதிய தாலுகா அலுவலக கட்டிடப் பணிகளை துவங்க ஏற்பாடு செய்தேன். கடையநல்லூர் தாலுகா புதிய அலுவலகப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் தமிழக முதல்வர், வருவாய் துறை தலைமை செயலாளர் ஆகியோரிடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கியும் தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்த நிலையில், அதனைக் கண்டித்து கடையநல்லூர் புதிய தாலுகா அலுவலகம் முன்பு எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களும் திரளாக கலந்து கொண்டு ஒரு வாரத்திற்குள் புதிய தாலுகா அலுவலகத்தை தமிழக அரசு திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக புதிய தாலுகா அலுவலகத்தை பொதுமக்களோடு பூட்டை திறக்கும் போராட்டம் நடைபெறும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் 04.02.21 வியாழக் கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்த புதிய தாலுகா அலுவலக திறப்பு விழாவை திடீரென ரத்து செய்த தமிழக அரசுக்கு எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அறிவித்தது போல இன்னும் ஒரு வார காலத்திற்குள் தாலுகா அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.