பொங்கல் பரிசுத் தொகுப்பு;வரும் 30ம் தேதிக்குள் டோக்கன் வழங்க தென்காசி ஆட்சியர் உத்தரவு..

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வருகின்ற 30ம் தேதிக்குள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு. சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக, தென்காசி மாவட்டத்தில் 4,38,515 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 178 குடும்பங்களுக்கும் ரொக்கமாக ரூ.2,500- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) மேலும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை எதிர்வரும் 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூபாய் 2,500 ரொக்கமும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுழற்சி முறையில் பெற ஏதுவாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு அதாவது முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கிடவும்,வழங்கும் நாள், நேரம், போன்ற விபரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 30.12.2020 தேதிக்குள் வீடுதோறும் சென்று நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் எந்தவித சிரமமும் இன்றி பொங்கல் சிறப்பு தொகுப்பினை பெற்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் அபுபக்கர்சித்திக்