நெல்லையில் ஆதரவற்றோருக்கு உணவளித்து உதவிய ராதாபுரம் தாலுகா அலுவலகம்; பொதுமக்கள் பாராட்டு…

நெல்லை மாவட்டம் இராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் கார்டு எடுக்க வந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இந்த செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே கல்மாணிக்கபுரம் உள்ளது. இங்கு மதர் தெரசா என்ற முதியோர் இல்லத்தை சகோதரி மரிய ரத்னா என்பவர் நடத்தி வருகிறார். இந்த முதியோர் இல்லத்தில் 23 முதியோர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் கிடைக்க ஆதார் கார்டு தேவை என்பதால் ராதாபுரம் தாலுகா அலுவலகத்திற்கு ஒரு வேனில் வந்தனர். ஆதார் கார்டு எடுக்க போகும் போது மின்சாரம் தடைபட்டுள்ளது. ராதாபுரம் மின் விநியோகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் மாலை வரை மின் வினியோகம் இருக்காது என கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து என்ன செய்வதென்று அறியாது தவித்த முதியோர்களுக்கு ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றும் பேட்ரிக் 23 முதியோர்களுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்பு அவர்களுக்கு ஆதார் கார்டு எடுக்க தனது ஏற்பாட்டில் ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் அனைவருக்கும் ஆதார் கார்டு எடுக்கும் பணியை தொடங்கினார்.ஆதார் எடுக்கும் பணி மதியத்திற்கு மேல் நடைபெற்றதால் அனைவருக்கும் மதிய உணவும் அளிக்க மண்டல துணை வட்டாட்சியர் பேட்ரிக் முடிவு செய்து கடையில் உணவு வாங்கி ஆட்டோவில் கொண்டு வரப்பட்டு அனைவருக்கும் ஆதார் மையத்திலேயே தனது கையினால் உணவுகளை பரிமாறினார். அதற்கு உதவியாக தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.ஆதார் சேவை மையமே அன்னதான கூடமாகவும் மாறியது. ஆதரவற்ற முதியோர்களுக்கு தாலுகா அலுவலகத்தில் உணவளித்து சிறப்பித்த சம்பவம் முதியோர்களை மட்டுமல்லாது அனைவரையும் மனம் நெகிழச் செய்துள்ளது.மதர் தெரசா முதியோர் இல்ல நிறுவனர் மரிய ரத்னா ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்