Home செய்திகள் பள்ளியில் மூலிகை செடி வளர்ப்பு… பள்ளிகளுக்கு இது முன்னோடி..

பள்ளியில் மூலிகை செடி வளர்ப்பு… பள்ளிகளுக்கு இது முன்னோடி..

by ஆசிரியர்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பல்வேறு மூலிகைச் செடிகள் அமைத்து, அதன் பெயர், பலன்களையும் தெளிவுபடுத்தி, மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்க்கின்றனர்.

பசுமை பள்ளி :

கற்றலில் ஒரு விஷயம் மனதில் பதிய பள்ளிதான் சரியான இடம். இதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி. பள்ளிக்குள் நுழையும்போதே மரம், செடி, கொடிகள் கண்களை கவர்வது ஒரு புறம் இருக்க,மூலிகை செடிகளுடன் தாவரங்கள் பச்சை ,பசேலென கண்ணை குளிர்விக்கின்றன.பள்ளியா, பூங்காவா என்று ஒரு சந்தேகம் எழுந்தாலும், பள்ளிதான் என்பதை உறுதி செய்ய மாணவர்கள் சப்தம்… இது ஒரு பசுமைப் பள்ளி.பூமித்தாயின் மடியை குளிர்விக்க செடி, கொடி, மரங்களை வளர்க்க வேண்டும் என்பதையும் மாணவர்கள் கற்றுக்கொள்ளும்படி, புல்தரை, மரங்கள், செடிகள், கொடிகள், மூலிகைத் தோட்டம் என்று பள்ளிக்குள் பசுமை படர்ந்திருக்கிறது.

மாணவர்கள் செடி வளர்க்க காரணமான விவசாய கல்லூரி களப்பயணம் :

காய்கறிகள் எப்படி கிடைக்குது? ரொம்ப வித்தியாசமா இருக்கே இந்த கான்செப்ட் என்று பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்திடம் கேட்டோம். மெல்ல சிரித்தபடி தொடர்ந்தார்.. பள்ளி வளாகத்தை தூய்மையாக, பசுமையாக வைத்திருக்கவும், மாணவர்களிடையே அறிவுத்திறனை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. எங்கள் பள்ளியில் மாணவர்களிடம் விவசாயத்தின் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக தேவகோட்டை அருகில் உள்ள விவசாய கல்லூரிக்கு இரண்டு முறை களப்பயணம் அழைத்துச என்று விவசாத்தின் நடைமுறைகளையும்,விவசாயம் இருந்தால்தான் நமது வாழ்க்கை சிறக்கும் என்பதையும் கற்றுக்கொடுத்து வருகிறோம்.

பண்ணை சுற்றுலா மூலம் மரம் வளர்க்கும் மாணவர்கள்:-

இது இந்த காலத்துக்கு ரொம்ப முக்கியம். இல்லேனா இவங்களுக்கு விவசாயம்னு ஒண்ணு இருப்பதே தெரியாம போயிரும்னுதான் 4 வருஷத்துக்கு முன்னால தேவகோட்டையில் உள்ள அரசு தோட்டக்கலை துறையை நாடினோம். அவங்க எல்லா விதத்துலயும் எங்களுக்கு உதவியாயிருந்தாங்க. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அரசு தோட்ட கலை பண்ணைக்கு துறை அலுவலர் தர்மர் உதவியுடன் மாணவர்களை களப்பயணம் அழைத்து சென்று,பண்ணை சுற்றுலா திட்டத்தில் செடிகளை எவ்வாறு பராமரித்து வளர்ப்பது என்கிற விஷயங்களை நேரடியாக கற்று கொடுத்து வருகிறோம்.மென்தண்டு ஒட்டு,பதியமிடுவது எவ்வாறு,கவாத்து செய்வது எவ்வாறு ,டிராக்டர் ஓட்டுவது எவ்வாறு என்பதை எல்லாம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறோம்.

நாட்டு காய்கறிகள் உற்பத்தி செய்யும் மாணவர்கள் :

எங்கள் பள்ளியில் கத்திரி, வெண்டை, பாகற்காய், தக்காளி, அவரை போன்ற நாட்டு காய்கறி விளையுது. விவசாய பண்ணை மற்றும் கல்லூரி சென்று வந்ததன் ஊக்குவிப்பால் மாணவர்களே செடிகளை கொண்டு வந்து நட்டு காய்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

மூலிகை செடி வளர்ப்பு சாத்தியமானது எவ்வாறு ?

எங்கள் பள்ளியில் வளரும் காய்கறிகளுடன் மூலிகை செடிகளையும் வளர்க்கலாம் என்கிற ஆலோசனையை எங்கள் பள்ளி செயலர் அரு .சோமசுந்தரம் தெரிவித்தார்.மாணவர்களை கொண்டே மூலிகை செடிகளான தூதுவளையில ஆரம்பிச்சு, வல்லாரை, மருத்துவ குணம் நிறைந்த பச்சை இலை, ஓமவல்லி, கற்பூர வள்ளி, துளசி போன்றவற்றையும், அனைத்து கீரை வகைகள், அழகு பூச்செடிகள்ன எதையும் நாங்க விட்டு வைக்கல. வண்ணமிகு தோற்றத்துடன் பள்ளி வளாகம் காட்சியளிக்கிறது.பள்ளியின் நடுப்பகுதியில் பல்வேறு வகை மூலிகைச்செடிகள் வைக்கப்பட்டு, செடியின் சாதாரண பெயர், தாவரவியல் பெயர், அதன் பலனையும் எழுதி வைத்துள்ளோம். இங்கு தண்ணீர் விட்டு, குப்பை சேர்க்காமல், பசுமையாக பராமரிக்கிறோம். பள்ளி மாணவர்கள் மூலிகை செடியின் சிறப்புகளை சொல்லும் வகையில் நன்கு அதன் பயன்களை அறிந்து வைத்துள்ளனர். அதனை அழகாக எடுத்து சொல்கின்றனர். செயற்கை உரம் போடுவதில்லை. இலைகளை சேகரிச்சு மக்க வச்சு உரமாக்கி போடுவோம். செடிகளுக்கு இதைத்தான் பயன்படுத்தறோம். ஆர்வம் இருக்கறவங்க தாங்களா முன்வந்து தண்ணீர் ஊத்துவது, உரம் வைப்பது, விதை போடறதுன்னு செய்வாங்க. விவசாயம்னா என்ன, காய், கனிகள் நமக்கு எப்படி கிடைக்குதுன்னு தெரிஞ்சுக்க மாணவர்கள் வாரத்துல ஒரு நாள்னு குரூப் குரூப்பா பார்வையிடுவாங்க.இளம் வயது மாணவர்களுக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கு. என்கிறார் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் .

பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் செடி வளர்க்கும் மாணவர்கள், வீடுகளில் செடி வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் பள்ளி :

பள்ளியில் மரம் வளர்க்கும் மாணவர்கள் தங்களது வீடுகளிலும் இது போல செடி வளர்க்கிறர்களாம்.பள்ளியின் ஊக்குவிப்பால் மாணவர்களுக்கு செடி வழங்கப்பட்டு , வீட்டுக்கு வெளியே இருக்கும் இடத்தில் மரக்கன்று நடுவது, செடிகள் நட்டு வைப்பது என்று மிக ஆர்வமாக இருப்பதாகவும் பெருமிதம் கொள்கிறார் இவர். வீடுகளில் தொடர்ந்து செடி வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் குழு இந்த பள்ளியின் தோட்டப் பராமரிப்புப் பணிகளில் கண்காணிப்பாளராக இருப்பவர் ஆசிரியர் கருப்பையா, மேற்பார்வையாளராக ஆசிரியைகள் செல்வமீனாள், முத்துமீனாள் இருக்கிறார்கள்.

மூலிகை செடிகளின் பயன்களை மாணவர்களே சொல்லுதல் :

காய்கறி வளர்ப்போம்.. சேமிப்போம்..மூலிகை செடி வளர்த்து இளம் மாணவர்களுக்கு நல்ல ஆரோக்கிய வாழ்வும் வாழ கற்றுக்கொடுக்கும் பள்ளியை பாராட்டுவோம்.தவிர, இங்கு வந்து செல்பவர்கள், குறிப்பிட்ட செடிகள் தங்களுக்கு தேவை என்றால், எங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் அச்செடிகளை வீட்டில் வளர்க்கவும் வாங்கிக் கொடுக்கிறோம்.இதனால், மூலிகை செடி மற்றும் செடிகள் வளர்ப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுவதுடன், அதுபோன்ற செடிகள் அழியாமல் காக்கப்படுகிறது. பல்வேறு பள்ளிகளில் பல்வேறு நல்ல பழக்கங்கள் ஊக்கப்படுத்துவதுபோல, இங்கு பொது அறிவு, செடிகள் வளர்ப்பு, மூலிகை செடிகளின் பலன்கள் போன்றவற்றை மாணவர்கள் அறியச் செய்கிறோம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com