Home செய்திகள் “தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கும் ஆவின்!-பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..

“தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கும் ஆவின்!-பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..

by Askar

“தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கும் ஆவின்!-பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் ஆண்டுதோறும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், “சுதந்திர தினம்”, “குடியரசு தினம்”, “தேசிய பால் தினம்” உள்ளிட்ட தேசிய தினங்களுக்கும் அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடுவது வழக்கமாகும்.

அவ்வாறான வழக்கத்தை கொண்டிருந்த தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் மதவாத சக்திகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளுக்கும் கூட வாழ்த்துச் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் கடந்தாண்டு ஜனவரி 26, 74வது குடியரசு தினம், ஆகஸ்ட்-15, 77வது சுதந்திர தினம், நவம்பர் 26, தேசிய பால் தினம் உள்ளிட்ட முக்கியமான தேசிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்தது.

இந்த நிலையில் இந்தியாவின் 75வது குடியரசு தினமான இன்று (ஜனவரி-26) ஆவின் பால் பாக்கெட்டுகளில் மீண்டும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி வெளியிடாமல், வழக்கமான நடைமுறையை தவிர்த்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக முக்கிய தேசிய தினமான குடியரசு தினத்தை மீண்டும் புறக்கணித்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு புதிது, புதிதாக வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறையை அமுல்படுத்தி விட்டு தேசம் சார்ந்த முக்கிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்திருப்பது தேசிய தினங்களை தமிழ்நாடுஅரசின் ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் புதிதாக கொண்டு வரப்படும் திட்டங்களுக்கும், புதியதாக அமைக்கப்படும் மருத்துவமனைகள், நூலகங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பல்வேறு விழா அரங்குகளுக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயரை சூட்டுவதற்கும், கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு செலவில் கொண்டாடுவதற்கும் முனைப்பு காட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய குடியரசு, சுதந்திர தினம், “தேசிய பால் தினம்” உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் வழக்கமான நடைமுறையில் இருந்து விலகி, தேசிய தினங்களுக்கு மட்டும் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணிப்பு வேலைகளை செய்யும் ஆவின் அதிகாரிகள் மீதும், அதனை கண்காணிக்கத் தவறிய பால்வளத்துறை அதிகாரிகள் மீதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், புறக்கணிப்பு பணிகள் தொடர்கதையாக இருப்பதும் வேதனைக்குரிய விசயமாகும்.

மத்தியில் ஆளுகின்ற, மாநிலங்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகின்ற ஆட்சியாளர்களும் அவர்களின் கைத்தடியாக செயல்படும் தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு, திராவிடம் என்றாலே எட்டிக்காய் கசப்பது போல் ஒருவேளை ஆவினுக்கு, குறிப்பாக திமுக அரசுக்கு தேசியம் என்றாலே கசக்கிறதா..? என தெரியவில்லை.

ஏற்கனவே இந்தியாவின் குடியரசு, சுதந்திர தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகத்திற்கும், அதனை கண்காணிக்கத் தவறிய பால்வளத்துறைக்கும், நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, முக்கிய தேசிய தினங்களை புறக்கணித்து வரும் ஆவின் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி வருங்காலங்களில் இது போன்ற புறக்கணிப்புகள் நடைபெறாமல் தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் ஆண்டுதோறும் வாழ்த்துச் செய்தி வெளியிடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

சு.ஆ.பொன்னுசாமி நிறுவனத் தலைவர் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com