மதுரை: மதுரை மாநகராட்சி டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில், தற்போது ஒரு சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று பரவலாக இருந்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய இதன் தொடர்பான பிற அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகரை பொறுத்தவரை செப்டம்பர் மாதம் 7 நபர்களுக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய் பரவல் இல்லை என்ற நிலை இருந்தபோதிலும், எதிர்வரும் நாட்களில் நோய்ப்பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் டெங்கு பரவும் தன்மை, ஏடிஎஸ் கொசுப்புழு உருவாகும் இடம், ஏடிஎஸ். கொசு வாழ்க்கை சுழற்சி முறை மற்றும் அதனை தடுக்கும் முறைகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டது. மேலும், அனைத்து மாநகர மற்றும் பிற அரசுத்துறை அலுவலர்களுக்கும் அவரவர் பொறுப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கடந்த 3 மாதங்களில் டெங்கு மற்றும் காய்ச்சல் பற்றிய விரிவான ஆய்வுக்கூட்டம் மண்டலவாரியாக ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்டது. மண்டலவாரியாக சிறப்புக்குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டது. மேலும் கொசுப்புகை மருந்து அடிக்கும் பணி மற்றும் கொசுப்புழு உற்பத்தி தடுத்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், டெங்கு கொசுப்புழு உற்பத்தி தடுக்கஇ தேவையற்ற டயர்களை அப்புறப்படுத்துதல், கட்டிடப்பணி நடக்கும் இடத்தில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுத்தல், பழைய பொருட்கள் சுழற்சி செய்யும் இடங்களை ஆய்வு செய்தல், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் கொசுப்புழு உற்பத்தியை தடுத்தல், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தல் போன்ற பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிடப் பட்டது.
இக்கூட்டத்தின் வாயிலாக கீழ்க்கண்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டது : பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு மற்றும் அருகாமையில் உள்ள இடங்களில் கொசுப்புழு தேங்காதவண்ணம் (தேவையற்ற பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள் அப்புறப்படுத்தவும் மற்றும் குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் எனவும், காய்ச்சல் வந்தால் தாமாக மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக அருகாமையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் , வீடு தேடி வரும் மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். அனைத்து அரசு அலுவலர்களும் தங்களுடைய அரசு அலுவலகங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை அழித்து வாரம் ஒருமுறை மாநகராட்சிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வணிக வளாகங்கள் தங்கள் கட்டிடத்தில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டிடப்பணி நடக்கும் இடங்களில் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் கொசுப்புழு ஏற்படாத வண்ணம் உறுதி செய்ய வேண்டும்.
முன்னதாக டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த உறுதிமொழி மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் அனைத்துப் பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில், துணை மேயர் தி.நாகராஜன் நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, கல்வி அலுவலர் நாகேந்திரன், மண்டல பூச்சியியல் வல்லுனர் முனைவர்.விக்டர், சுகாதார அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மண்டல மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், மாநகராட்சி மற்றும் அரசு பிறத்துறை அலுவலர்கள் (காவல்துறை, அங்கன்வாடி, இந்திய மருத்துவர் சங்கம், உணவுப்பாதுகாப்புதுறை ரயில்வே துறை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.