காபி பொடியில் 13 மணி நேர ஓவியம்… மதுரை இளம்பெண்ணின் குடும்ப தின சாதனைஉலக குடும்ப தினத்தை சிறப்பிக்கும் நோக்கில் காபி பொடியில் 13 மணி நேரம் ஓவியம் வரைந்து சாதித்துள்ளார் மதுரையை சேர்ந்த கீர்த்திகா.காபி பொடியில் 13 மணி நேர ஓவியம்… மதுரை இளம்பெண்ணின் குடும்ப தின சாதனைகுடும்ப உறவுகளின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 15 ஆம் தேதி உலக குடும்ப தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை சிறப்பிக்கும் நோக்கில் மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியில் வசிக்கும், காஸ்ட்யூம் டிசைனிங் இறுதியாண்டு பயிலும் 21 வயது மாணவி கீர்த்திகா ஒரு புது விதமான சாதனைக்கு முயற்சித்துள்ளார்.Virtue Book Of world Records என்ற அமைப்பின் மூலம் காபி பவுடரில் தொடர்ந்து 13 மணி நேரம் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.அதில் பெண்மையை போற்றும் விதமாக, பெண்ணின் இளமைப்பருவம், திருமணம், தாய்மை அடைதல், குழந்தை பெறுதல், முதுமை அடைதல் என வாழ்க்கையின் பல்வேறு படிநிலைகளை 11 ஓவியங்களாக வரைந்துள்ளார்.இதுவரை, காபி பவுடரில் இத்தனை ஓவியங்களை ஒரே திரையில் யாரும் வரைந்து சாதித்தது இல்லை என்பதால், இவருடைய முயற்சி Virtue உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும்.இது குறித்து கீர்த்திகா கூறுகையில், “குடும்ப தினத்தில் குடும்பத்தின் எல்லாமுமாக விளங்கும் தாயை வைத்து இந்த ஓவியத்தை வரைந்து உள்ளேன். அனைத்து தாய்க்கும் இதை அர்ப்பணிக்கிறேன். தாய் நம் வாழ்வின் எவ்வளவு முக்கியமான பொறுப்புகளை கொண்டவள் என்பதை உணர்த்தும் வகையில் ஓவியங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தனியாக இப்படி ஒரு சாதனையை செய்ய வேண்டும் என்று எனக்கு நீண்டநாள் ஆசை. அது இன்று நிறைவேறி விட்டது. காலை 8 மணிக்கு துவங்கினேன். இரவு 10 மணிக்கு முடிப்பேன்.சிறிய வயதில் இருந்தே ஓவியத்தில் தீராத ஆர்வம் உண்டு. அதை இதுவரை பொருட்படுத்தவில்லை. ஊரடங்கு காலத்தில் அந்த திறமையை கொஞ்சம் புதுப்பித்து இந்த சாதனையை செய்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று காபி ஆர்ட்.காபி ஆர்ட்டில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தின் விஜய்சேதுபதி விஜய் சந்திக்கும் காட்சியை ஓவியமாக வரைந்து காட்சிப்படுத்தி உள்ளேன்” என்றார்.திறமையாளர்களை அடையாளப்படுத்தி கவுரவிக்கும் Virtue Book Of world Records அமைப்பின் மூலம் தனது சாதனை உலகிற்கு இன்னும் அதிகமாக வெளிப்படும் என்றும், ஏற்கனவே இரண்டு முறை வெவ்வேறு சாதனைகளில் பங்கேற்று உள்ளதாகவும் தற்போது மூன்றாவது முறையாக ஒரு புதுவித சாதனைக்கு முயற்சித்து உள்ளதாகவும் நம்பிக்கையுடன் கூறுகிறார் கீர்த்திகா.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.