Home செய்திகள் மதுரை: மூதூர் மாநகரத்தின் கதை – 14: அண்ணன் தம்பி ஐயன் சாமி ஆன வரலாறு .

மதுரை: மூதூர் மாநகரத்தின் கதை – 14: அண்ணன் தம்பி ஐயன் சாமி ஆன வரலாறு .

by mohan

நம் கிராமங்களுக்குள் நுழைந்தால், ஊரின் எல்லைகளில், நுழைவாசலில் ஏதேனும் ஒரு சாமியும், அவர்களோடு ஒரு கதையும் இருக்கும். ஊரைக்காக்கும் எல்லைச்சாமி, ஓடுகாலன் சாமி, ஏழு கன்னிமார்கள், தீப்பாய்ந்த அம்மன் இப்படி அந்தந்த தெய்வங்களின் பெயரோடே நாம் அந்தந்தச் சமூகம் சார்ந்த கதைகளையும் புரிந்துகொள்ள முடியும். காரைக்குடி பகுதியில், முத்துமாரியம்மன் என்றொரு கோயிலுண்டு. 1956-ம் ஆண்டு அம்மை நோய் கண்ட எட்டு வயதுச் சின்னஞ் சிறுமி அப்பகுதியில் வந்தமர்ந்து, சிலகாலம் அருள்வாக்கு நல்கி, அங்கேயே முத்துமாரி அம்மனாகக் கோயில் கொண்ட கதையை, இன்றும்கூட ஊர்க்காரர்கள் சொல்வார்கள். அச்சிறுமியைக் கண்ணால் கண்டு, பேசியதாகச் சொல்லும் தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்ட மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆக, இப்படியாகத்தான் ஒவ்வோர் ஊரிலும் கடவுள்கள் உருவாகி, கோயில் கொள்கிறார்கள்.ஏழு கன்னிமார்ஏழு கன்னிமார்மூதூர் மதுரையின் அடையாளங்களுள் ஒன்றான அரிட்டாப்பட்டிக்குள் நுழைந்து திரும்பிய நாளில்தான் சின்ன ஐயனையும், பெரிய ஐயனையும் சந்திக்க நேர்ந்தது. மதுரை மூதூர் தனக்குள் வைத்திருக்கும் அழகிய கலையெழில் நிரம்பிய அற்புத கிராமம் ‘புலிப்பட்டி’ என்றுதான் தோன்றியது.அரிட்டாபட்டி – சண்முகநாதபுரம் சாலையில் இருப்பது சின்ன ஐயன் கோயில். அழகர்கோயிலில் இருந்து வல்லாளபட்டி வழியாக புலிப்பட்டி கிராமத்திற்கு வந்தால், மலைமேல் ஒரு குகைக்குள் பெரிய ஐயன் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். புலிப்பட்டிக்கு மேலூரில் இருந்து வல்லாளபட்டி வழியாக, ஒரு நாளைக்கு மூன்றோ, நான்கோ நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மழைநாள்களில் போனால், கண்ணுக்கு விருந்தாகத்தான் இருக்கும்.வல்லாளபட்டியில் இருந்த வல்லாளத்தேவர் என்கிற பெரிய தலைக்கட்டுதான் நாயக்கர் காலத்தில் அழகர்கோயிலைக் காத்து நின்ற பெருமக்கள். அப்படி அழகரைக் காத்து நின்ற மக்களை எதிர்த்து வெள்ளூர் நாட்டில் இருந்து பெரும்படை ஒன்று சண்டையிடக் கிளம்பி வந்ததாம். எதற்கு சண்டை வந்தது என்று கேட்டால், ஊரிலுள்ள இன்றைய வயதான மனிதர்களுக்குக்கூடக் காரணம் தெரியவில்லை. சரி, ஏதோ காரணத்திற்காக சண்டை வந்துவிட்டது. அப்புறம் என்ன ஆனது என்பதைத் தெரிந்துகொள்வோம்.அரிட்டாபட்டி மலையை ஒட்டி, அழகர்கோயில் சண்முகநாதபுரம் பகுதியில் இருந்த வல்லாளபட்டி மக்கள் சிறுபடை மட்டுமே வைத்திருந்தார்கள். அண்ணன் தம்பி இரண்டு பேரும் வெள்ளூர் பெரும்படையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். அண்ணன்காரர் தன் படையோடு புலிப்பட்டி மலைமேல் இருக்கும் குகைக்குள் போய் உட்கார்ந்துகொண்டாராம். சிலர் ‘பயந்து ஓடிட்டாரு’ என்று சொல்கிறார்கள். ஆனால், சண்டையின் நடைமுறைத் தந்திரமாக ஏதேனும் உட்கிடைக்கை இருந்ததா என்று தெரியவில்லை. அதெப்படி, தம்பியை எதிராளியிடம் விட்டு விட்டு, அண்ணன் ஒளிந்துகொள்ள முடியும் என்று தோன்றியது. கிராம மக்களிடம் கதை இருந்ததே தவிர, பதில் இல்லை.பெரிய ஐயன் கோயில் மலைபெரிய ஐயன் கோயில் மலைபெரும்படைக்கும், சிறுபடைக்கும் சண்டை நடந்தது. தம்பி சண்டையில் வெற்றி பெற்று, சின்ன ஐயன் சாமியாக அழகர்கோயில் – சண்முகநாதபுரம் சாலையில், அழகாக எண்ணற்ற புரவிகள் சூழ வீற்றிருக்கிறார். ஆளரவம் அதிகமில்லாத ஒரு சாலையில், சட்டென நம் கண்முன் விரிகிற சின்ன ஐயன் கோயில் ஒரு ‘விஷுவல் ட்ரீட்’ என்றுதான் சொல்ல வேண்டும்.புலிப்பட்டி மலைமேல் ஏறி குகைக்குள் ஒளிந்த அண்ணன் பெரிய ஐயனாகி, குழந்தைப்பேறு, திருமணப்பேறு என வரமருளும் சாமியாக நிற்கிறார். மலையின் கீழே ஏழு கன்னிமார்சாமியும் இருக்கிறார்கள். மிகப்பெரிய ஆலமரமும், பழைமையான இச்சி மரமும் இந்த மலைக்கோயிலுக்கு மேலும் அழகூட்டுகின்றன.மலையின் மேல், ஐயன் அமர்ந்திருக்கும் குகைக்கு அருகிலே ஒரு குகை. அதற்குள் உள்ள வற்றாத சுனையும், சுவை மிகுந்த தெளிந்த நீரும் இங்குள்ள உயிரினங்களுக்குப் பெரும் வரமாகும். மலைக்குக் கீழே, ஆலமரத்திற்கு அருகே உள்ள மிகப்பெரிய நல்ல தண்ணீர்க் குளமும், கோடைக்கும் குடிநீர் கொடுக்கும் ஊற்றும் புலிப்பட்டிக்கு இன்னும் சிறப்பாகும்.மலைகளுக்கும் மழைக்கும், மழைநீர் சேமிப்புக்குமான சூழலியல் வகுப்புகளை இங்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்துவந்து, கற்றுக்கொடுத்தால், குழந்தைகள் எளிதாகக் கற்றுக் கொள்வதோடு, மலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்துகொள்வார்கள் என்று தோன்றுகிறது. கல்வித்துறை நினைத்தால், ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பையும், தங்கள் பகுதிக் குழந்தைகளுக்கு அழகாகக் கொண்டு சேர்க்க முடியும். சூழலியலும் வரலாறும் புவியியலும் சமூகவியலும் ஏட்டுப் பாடமாய் இல்லாமல், வாழ்க்கைப் பாடமாக, கற்கண்டாய் இனிக்கும்தானே!சின்ன ஐயன் கோயில்சின்ன ஐயன் கோயில்இந்த இரண்டு ஐயனாருக்கும் சுடுமண் சிற்பங்கள் நேர்த்திக்கடனாகச் செய்து செலுத்துவதும், புரவியெடுப்பு விழாவில் வண்ணக் குதிரைப்பொம்மைகள் காணிக்கையாகச் செலுத்துவதும் பல ஆண்டுகளாக நிகழ்கிறது என்பதைப் பெரிய ஐயன் கோயில் முன் நிறைந்து கிடக்கும் சுடுமண் பொம்மைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இன்றும், புரவியெடுப்புத் திருவிழாவில், பெரிய ஐயனுக்கு நாலில் ஒரு பங்கு குதிரையும், சின்ன ஐயனுக்கு மூன்று பங்கு குதிரைகளும் வந்து சேரும் என்பது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சின்ன ஐயன் கோயிலை கிரானைட் கற்களால் புதுப்பித்திருக்கிறார்கள். ஆனால், புலிப்பட்டி மலையில், குகைக்குள் இருக்கும் பெரிய ஐயன் இன்றும் பழைய தோற்றத்தில், கிராமியச் சூழலில், அமைதியாக அமர்ந்திருக்கிறார்.அண்ணனும், தம்பியுமாக வரலாற்றில் வாழ்ந்த இரு மனிதர்கள் இன்று தங்கள் இனக்குழு மக்களைப் பாதுகாத்து, அருள்பாலிக்கும் தெய்வங்களாக உருக்கொண்டிருப்பது, நம் முன்னோரின் மூதாதையர் வழிபாடு என்பதன் நீட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.பெரிய ஐயனிடமும், சின்ன ஐயனிடமும் காணப்படும் சுடுமண் சிற்பங்களும் புரவிகளும் புலிப்பட்டி மலையில் மாமல்லபுரம் பாறைகளைப் போன்ற தோற்றங்களில் அழகை ஒளித்துக் காட்டும் பெரும் பாறைகளும் மூதூர் மதுரைக்குள் இன்னும் பல அற்புதங்கள் பலர் பார்க்காமலே கிடக்கின்றன என்பதைத்தான் மதுரை மக்களுக்குச் சொல்கின்றன என்று தோன்றுகிறது!

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com