மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது . அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமியும் , அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்தில் ஆண்டுதோறும் ஜனவரி தைப்பூச பவுர்ணமியன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம் .அந்த வகையில் தெப்பத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து சுவாமியும் , அம்மனும் தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் . இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது . இதனை முன்னிட்டு கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும் , சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயில் வந்தடைந்தனர்.அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சுவாமியும் அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளியதையடுத்து பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுக்க , தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்குளிர கண்டு தரிசனம் செய்தனர் . ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் விழா என்பதால் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததுடன் தெப்பத்திலும் காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.