
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைய உள்ள கள அருங்காட்சியகத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார்.தமிழர்களின் தொன்மையை பறை சாற்றுகின்ற கீழடி அகழாய்வு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் நடைபெற்று வருகிறது முதல் மூன்று அகழாய்வுகள் இந்திய தொல்லியல் துறை மூலமாக நடைபெற்று வந்த நிலையில் 4, 5 மற்றும் 6ஆம் கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு மதுரை கேகே நகரில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பார்வையிட்டனர்.இதனையடுத்து நிரந்தர கள அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத் தேர்வுகள் கீழடி கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கொந்தகை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கீழடி வேல்முருகன் கோவில் எதிரே உள்ள திடலில் அமைப்பது என்று முடிவானது.
இன்று நடைபெற்ற விழாவில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் இஆப., சென்னையிலும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜ், தமிழகத் தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியர் சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் மூன்று கட்ட அகழாய்வினை மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களையும், 4, 5ஆம் கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட தமிழக தொல்லியல் துறை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களையும் கண்டறிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் குறிப்பிட்ட சில மதுரை கேகே நகரில் உள்ள உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி மட்டுமன்றி கூடுதலாக கொந்தகை அகரம் மணலூர் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வருகின்ற அகழாய்வுகளிலும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் கட்டுமானங்கள், உலை அடுப்பு, எடைக்கற்கள், தங்க காசு, பானை ஓடுகள், பெரிய விலங்கின் எலும்புக்கூடு ஆகியவற்றுடன் கொந்தகை ஈமக்காடு அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் இதுவரை முழு அளவிலான ஐந்து எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.