Home செய்திகள் கரோனா ஒழிப்புப் போராட்டத்துல எனக்கும் பங்கிருக்கு!- பேருந்து ஓட்டுநர் பேட்டி.

கரோனா ஒழிப்புப் போராட்டத்துல எனக்கும் பங்கிருக்கு!- பேருந்து ஓட்டுநர் பேட்டி.

by mohan

ஊரடங்கு நேரத்திலும் மதுரையில் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் சரியான நேரத்தில் பணிக்கு வர சக்திவேல் பங்களிப்பு முக்கிய காரணம். ஊரடங்கு முடியும் வரையில் அரசு மருத்துவமனைப் பணியாளர்களுக்குப் பேருந்து ஓட்ட வேண்டும் என்று சொன்னதும், ஏதேதோ காரணம் சொல்லி நழுவியவர்கள் மத்தியில், ‘நான் ஓட்டுறேன் சார்’ என்று தாமாக முன்வந்தவர். பயணிகளாக வருகிற எங்களிடம் அவர் காட்டுகிற கனிவையும் புன்னகையையும் நாங்கள் அப்படியே நோயாளிகளுக்குக் கடத்துகிறோம் என்று புகழ்கிறார்கள் மருத்துவப் பணியாளர்கள்.

இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

மதுரையிலருந்து திருநெல்வேலிக்கு ஓடுற பை பாஸ் ரைடர் பஸ்ஸோட டிரைவர் நான்.ஊரடங்கு உத்தரவு வந்த மறுநாளே, அரசு மருத்துவமனைல வேலைபாக்குறவங்களுக்காகச் சிறப்புப் பேருந்து இயக்கப்படும்னு அரசு அறிவிச்சுது. மதுரையில இருக்குற ஒவ்வொரு டிப்போல இருந்தும் ரெண்டு, மூணு பஸ்ஸ இயக்க முடிவெடுத்தாங்க. புதூர் டிப்போவுல அப்படி மூணு பஸ் இயக்கணும்னு முடிவெடுத்தப்ப, கொஞ்சம் பேர் மட்டும் முன்வந்தாங்க. அதுல நானும் ஒருத்தன்.

இப்போது உங்கள் வேலை என்ன?

காலைல சரியா 5.30-க்கு புதூர் டிப்போவுலருந்து பஸ்ஸ வெளிய எடுப்பேன். நேரே அழகர்கோயில். அங்கிருந்து ஜிஎச் போற வழில நெட்டுக்கு ஆட்கள் ஏறுவாங்க. பெரும்பாலும் நர்ஸ்கள். அப்புறம் டாக்டர்கள், தூய்மைப் பணியாளர்கள். 6.45-க்கு ஜிஎச் போயிடுவேன். நைட் ட்யூட்டி பாக்குறவங்க வர்ற வரைக்கும் காத்திருப்பேன். 7.30 மணிக்கு அவங்கள ஏத்திக்கிட்டு நெட்டுக்க இறக்கிவிட்டுக்கிட்டே அழகர்கோயில் வரைக்கும் போவேன். அப்புறம் நேரே புதூர் டிப்போ. இப்படி, மதியம் 12 மணிக்கு, சாயந்திரம் 5.30-க்கு ஒரு ரவுண்ட். அப்புறம், நைட் ட்யூட்டி ஆட்களை இறக்கி விட்டுட்டு, ஏற்கெனவே ட்யூட்டி முடிச்சவங்கள ஏத்திக்கிட்டு திரும்பவும் அழகர்கோயில் வந்து பஸ்ஸக் கொண்டுபோய் டிப்போல விடும்போது ராத்திரி 9 மணி ஆகிடும்.

பாதுகாப்பில் கவனமாக இருக்கிறீர்களா?

தினமும் கிருமி நாசினி தெளிச்சிருக்காங்களான்னு பாத்துத்தான் வண்டியை எடுக்குறேன். பஸ்ல வர்ற எல்லாருமே மருத்துவப் பணியாளர்ங்கிறதால அவங்களே பஸ்ஸுக்குள்ள பொறுப்பா நடந்துக்கிடுறாங்க. எனக்கு இடைல நேரம் கிடைச்சாலும் வீட்டுக்குப் போறதில்ல. ராத்திரி போகும்போது, வாசல்லேயே கை, கால் கழுவிட்டு, நேரே பாத்ரூம் போய் குளிச்சிடுறேன்.எல்லோரும் வீட்டில் இருக்கும்போது நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். வீட்டில் என்ன சொல்கிறார்கள்?செல்லூர்லதான் ஒத்திக்குக் குடியிருந்தோம். அப்பவே கீழபனங்காடி கிராமத்துல இடம் வாங்கி, வீடு கட்ட ஆரம்பிச்சிருந்தேன். கரோனா பரவுதுனு தெரிஞ்சதும், நெருக்கடியான செல்லூர்லருந்து குடும்பத்தை பனங்காடிக்கு மாத்திட்டேன். இந்த சுதாரிப்பு ஊர்ல நிறைய பேர்கிட்ட இருந்துச்சு. அப்புறம் பிள்ளைங்க, ‘என்னப்பா தீபாவளி, பொங்கல்னாலும் லீவு கெடையாது. இப்பவாச்சும் உங்களோட இருக்கலாம்னு பார்த்தா இப்படி ட்யூட்டிக்குப் போயிட்டீங்களே’ன்னு முதல்ல கோவிச்சுக்கிட்டாங்க. அப்புறம் இது எவ்வளவு முக்கியமான வேலைன்னு புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறதே?

அதுக்கென்ன, எவ்வளவு நாள் நீடிச்சாலும் நான் வண்டி ஓட்டுவேன். ஏன்னா, நான் பாக்குறது எவ்வளவு முக்கியமான வேலைன்னு எனக்குத் தெரியும். டாக்டர், நர்ஸ் எல்லாம் என்னோட நம்பரை வாங்கி வெச்சிருக்காங்க. ஸ்கூல் பிள்ளைங்க, வேன் டிரைவர்கிட்ட பழகுற மாதிரி அவங்க எல்லாம் என்கிட்ட உரிமையாப் பழகுறாங்க. ஒரே ஒரு ஆள் வராட்டாலும் காத்திருந்து அவங்கள ஏத்திக்கிட்டுத்தான் வருவேன். ஒவ்வொரு டாக்டரோட வரவையும் எதிர்பாத்து அங்கே எத்தனை நோயாளிங்க காத்திருக்காங்க. நான் ஒரு நாள் லீவு போட்டாலும், இந்த வழக்கம் மாறிடும். கரோனாவை ஒழிக்குற போராட்டத்துல எனக்கும் ஒரு பங்கிருக்குங்கிறதை உணர்ந்துதான் இதைச் சொல்றேன் என்கிறார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com