இராமநாதபுரத்தில் ‘மக்கள் பாதை’ இயக்கம் சார்பாக நடைபெறும் தன்னார்வலர்கள் கலந்தாய்வு கூட்டம்

உ.சகாயம் ஐ.ஏ.எஸ் இன் வழிகாட்டுதலின் படி, சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இயக்கம் துவக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் பல்வேறு சமூகப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனை, ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டம், தமிழர் கலாச்சார பாதுகாப்பு என்று பல்வேறு அறவழி போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறது.

இந்நிலையில் இராமநாதபுரத்தில் நாளை 19.02.0217 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி ‘மக்கள் பாதை’ இயக்கம் சார்பாக தன்னார்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பின்வரும் தலைப்புகளில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெறுகிறது.

1) திண்ணை 2) திடல் 3) தறி 4) கலப்பை 5) கலை 6) மக்கள் மருந்தகம் 7) இயற்கை வளம் காப்பது 8)இரத்ததானம்

மேலும் பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களை செயல்படுத்தி மக்கள் பாதையை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று 1 கோடி தன்னார்வலர்களை (இளைஞர்களை) இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது உண்மையாகவே வாழ்த்துக்குரியதாகும்.

மக்கள் பாதை இயக்கத்தினர் பின் வரும் உறுதி மொழிகளை ஆத்மார்த்தமாக எடுத்து கடைப்பிடித்து வருகின்றனர்.

மக்கள் பாதை உறுதி மொழிகள் :

நான் இன்று முதல் தனிமனித ஒழுக்கத்தை கடை பிடிப்பேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன். ஊழலுக்கு துணை போக மாட்டேன். சட்ட திட்டங்களை மதித்து நடப்பேன். தாய் தந்தையர்களை மதிப்பேன். இயற்கை வளங்களை பாதுகாப்பேன். முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்வேன். விவசாயத்திற்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் பாடுபடுவேன். நெசவு மற்றும் குடிசை தொழிலை பேணி காப்பேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனிற்காக பாடுபடுவேன். மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வேன். ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையுடன் இருப்பேன்