மயிலாடுதுறை அருகே மேமாத்தூரில் கெயில் குழாயில் இருந்து 15அடி உயரத்திற்கு வாயு வெளியேறியதால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் கிராமத்தில் கெயில் நிறுவன குழாயிலிருந்து 15 அடி உயரத்திற்கு மேல் வாயு வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேமாத்தூர் கிராமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிலையம் செயல்பட்டு வருகிறது.தற்போது கெயில் நிறுவனம் சீர்காழி தாலுக்கா மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக குழாய்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்கள் வழியாக பதித்து வருகிறது. இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மேமாத்தூரில் உள்ள கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாடு நிலையம் அருகே ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் அப்போது அருகில் இருந்த குழாயில் இருந்து 15 அடி உயரத்திற்கு மேல் திடீரென வாயு வெளியேறியதால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அச்சமடைந்தனர்.புதிய குழாயை சுத்தப்படுத்தும் பணிநடைபெற்ற போது காற்று அழுத்தத்தின் காரணமாக புழுதியுடன் வாயு வெளியேறியதாக கெயில் நிறுவனத்தினர் தெரிவித்தனர். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள நிலையில் மேமாத்தூரில் கெயில் நிறுவனம் 20 அடி ஆழத்திற்கு பைப்புகளை பதித்து தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வருகிறது.இதனை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..