Home செய்திகள் மக்கள் ஊரடங்கு தேசமே முடங்கியது:- இது கொரானாவுக்கு முதல் அடி…

மக்கள் ஊரடங்கு தேசமே முடங்கியது:- இது கொரானாவுக்கு முதல் அடி…

by Askar

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மனிதரிடம் இருந்து மனிதனுக்கு பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  அனைத்து மாநிலங்களிலும், கல்வி நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் என பொதுமக்கள் கூடும் இடங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. ஆனாலும், வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்தவும், அவசரகாலத்திற்கான ஓர் ஒத்திகையாகவும் மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டுமென பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி, நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.  அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தவிர்த்து வேறு யாரும் வெளியில் வரவேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கோடி வர்த்தகர்கள் தங்கள் கடையை மூடி ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அறிவித்துள்ளனர். இதனால், இன்று ஓட்டல் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டிருக்கும். ரயில் சேவை நள்ளிரவு முதல் இன்று இரவு 10 மணி வரை நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மெயில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகாலை 4 மணி முதல் இயக்கப்படாது.  அதே சமயம், அதிகாலை 4 மணிக்கு முன்பாக பயணத்தை தொடங்கிய ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்படாது என்றும் அந்த ரயில்கள் மட்டும் தொடர்ந்து சென்றடையும் இடம் வரை இயக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் நாடு முழுவதும் 3,700 ரயில்கள் இன்று நிறுத்தப்பட உள்ளன.

அதே போல, சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் புறநகர் ரயில் சேவை கணிசமாக குறைக்கப்பட உள்ளது. டெல்லி மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் 1000 விமானங்கள் ஊரடங்கு உத்தரவால் இன்று இயக்கப்படாது என கூறப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியவாசிய துறைகள் மட்டும் வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கும். மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டரில், ‘கொரோனாவை எதிர்த்து நாட்டை பாதுகாக்க ஓய்வின்றி  உழைக்கும் மக்களுக்கு உங்கள் ஆதரவையும், பாராட்டையும் தெரிவிக்க மறக்காதீர்கள். அதற்காக இன்று மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் குடும்பத்துடன் தங்கள் வீட்டு பால்கனியில் நின்றபடி, அவர்களை பாராட்டுங்கள். உங்களின் பாராட்டு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என கூறி உள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை மகாராஷ்டிராவிலும், கேரளாவிலும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்றைய நிலவரப்படி 64 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 307 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் இன்று 1000 இடங்களில் அவசரகால பராமரிப்பு மேலாண்மை குறித்த ஒத்திகை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்து. அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் அளித்த பேட்டியில், ‘‘அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க வேண்டிய விதம் குறித்து பயிற்சி தரும் விதமாக ஞாயிறு அன்று நாடு முழுவதும் 1000 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்’’ என்றார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் பரவல், நமது பலவீனமான பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. தினக்கூலி தொழிலாளர்களும், சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ‘கை தட்டல்’ இவர்களுக்கு உதவாது. நிதி நிவாரணம், வரிச்சலுகை, கடனை திருப்பச் செலுத்துவதில் சலுகை போன்ற மிகப் பெரிய அளவிலான நிதியுதவி திட்டம்தான் இப்போதைய தேவை. இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com