தேர்தல் களம் மட்டுமல்ல..வாழ்வா, சாவா என தீர்மானிக்கும் போராட்டக்களம்’ – தூத்துக்குடியில் கனிமொழி ஆவேசம்!

மீண்டும் மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டால் ஜனநாயகம், பாதுகாப்பு,மதநல்லிணக்கம் ஆகியவை குறித்து நாம் அறிந்திருக்கின்ற இந்தியாவை மறந்துவிட வேண்டிய சூழல் ஏற்படும். நாஜிகளுக்கும், பா.ஜ.க,அ.தி.மு.க கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை” என தி.மு.க மாநிலங்களவை எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தி.மு.க வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வுமான கீதாஜீவன் தலைமை வகித்தார். இதில்,கனிமொழி எம்.பி., கலந்துகொண்டு பேசுகையில், “தற்போது நம் முன்னே இருப்பது வெறும் தேர்தல் களம் மட்டுமல்ல. வாழ்வா, சாவா என தீர்மானிக்கும் போராட்டக்களம் இது. நாட்டில் தமக்கு எதிராக எந்த ஒரு கட்சியும் இருக்கக் கூடாது என்பதற்காக தன்னிடம் உள்ள வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அனைத்துத்துறை அதிகாரங்களையும் பயன்படுத்தி கூட்டணிக் கட்சிகளை மிரட்டி வைத்துள்ளது பா.ஜ.க.

இந்த நிலையில், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாகிவிடும். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது பாலியல் வன்முறைச் சம்பவம் நடந்தேறி உள்ளது. இந்த சமயத்தில் பா.ஜ.க., எம்.எல்.ஏ., ஒருவர்  பெண்ணை தூக்கிக் கொண்டுவந்து கட்டி வைக்கிறேன் எனக் கூறுகிறார்.  அவர் இப்படிச் செய்வதற்கு பெண்கள் என்ன பொருளா. நாட்டில் பாதுகாப்பாக வாழ, நாம் ஆர்.எஸ்.எஸ். அல்லது பஜ்ரங் அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகச் சொன்னார் பிரதமர் மோடி. ஆனால்,இந்தியாவில் யாருமே தொழில்துறையில் முதலீடு செய்யத் தயாராக இல்லை. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 45 ஆண்டுகால இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தியதே பா.ஜ.க.தான். இதுதான் பா.ஜ.க., அரசின் சாதனை. மீண்டும் மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டால் ஜனநாயகம், பாதுகாப்பு, மதநல்லிணக்கம் ஆகியவை குறித்து நாம் அறிந்திருக்கின்ற இந்தியாவை மறந்துவிட வேண்டிய சூழல் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் நாம் பெற்றிருக்கக்கூடிய விடுதலையைப் பறிகொடுத்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். நாஜிகளுக்கும், பா.ஜ.க, அ.தி.மு.க கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.” என்றார்.