இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -8
(கி.பி 1299-1922)
கி.பி 1362 ஆம் ஆண்டின் முன்பனிக்காலம். உஸ்மானிய படைகள் ஐரோப்பாவின் எத்திரின் நகருக்கு வெளியே தங்கள் கூடாரங்களை அமைத்தனர்.
சீனாவிலிருந்து மத்திய ஆசியப் பகுதிகளுக்கு வந்த லீ சுவான் பல நாடுகளை ஆய்வுசெய்து வரலாறுகளாக பதியும் வரலாற்று ஆய்வாளர்.
அவர் உஸ்மானிய கிலாபத் பகுதியில் ஆய்வு செய்தபோது மன்னர் முராத்தின் ஆட்சி சிறப்புகளை கேள்விப்பட்டு தலைநகர் புருஷா வந்து மன்னரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு இருவரையும் நல்ல நண்பர்களாக ஆக்கியது. லீ சுவான் பல நிலப்பரப்புகளை நன்கு அறிந்து வைத்து பல தகவல்களை மன்னர் முராத்திடம் பகிர்ந்து கொண்டார்.
லீ சுவான் தன்னோடு சில வெடி பொருள் செய்யும் சூத்திரங்களையும் சிறு துப்பாக்கி போன்ற சில ஆயுதங்களையும் கொண்டு வந்திருந்தார்.
மன்னர் தனது முதன்மை அமைச்சரும் ராணுவத் தளபதியுமான கலீலை அழைத்து,
இந்த சூத்திரங்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளையும்எறி குண்டுகளையும் எறி அம்புகளை வீசும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் தயாரிக்க உத்தரவிட்டார்.
கலீல் தனது உதவித்தளபதியும் மிக இளைஞரும் போர் தளவாடங்களில் கூரிய அறிவுடைய வருமான நாசரிடம் இந்த திட்டங்களை வடிவமைக்க உத்தரவிட்டார்.
நாசர் போர்தளவாட ஆராய்ச்சி குழு ஒன்றை அமைத்தார். அதில் இந்த திட்டத்தில் ஆர்வமும், தொழில்நுட்ப அறிவும் உடைய பலர் இணைக்கப்பட்டு ஆராய்ச்சி துரிதப்படுத்தப் பட்டது.
அதன் விளைவாக சில கையெறி குண்டுகளும், நெருப்புகளை இலக்குகளில் துப்பும் தோட்டாக்களும், அதனை எறியும் துப்பாக்கி போன்ற அமைப்புகளும் உருவாக்கப்பட்டு ஐரோப்பா சென்ற படையில் இணைக்கப்பட்டது.
அந்த போர் தளவாடங்களோடு எத்திரின் நகரின் எதிரே உஸ்மானிய படை தங்கியிருந்தது.
உஸ்மானிய படைகளின் புதிய தொழில்நுட்ப ஆயுதங்களை அறியாத பால்கன் வீரர்கள் உஸ்மானிய படையைவிட அதிக வீரர்கள் தங்கள் படைகளில் இருந்ததால் கொஞ்சம் மிதப்பில் கோட்டை கதவை திறந்து கொண்டு படைகளை நேர் எதிராக களமிறக்கினர்.
உஸ்மானிய படை அரை சந்திர வடிவத்தில் நடுப்பகுதியில் உள்வாங்கி இரண்டு முனைகளும் வில் போல வளைந்து இருந்தது.
நடுப்பகுதியில் மளமளவென்று உட்புகுந்த பால்கன் படைகளை மூன்று புறங்களில் இருந்தும் கையெறி குண்டுகளை வீசியும், தோட்டாக்களை துப்பாக்கி போன்ற பொறிகளில் இருந்தும் மளமளவென உஸ்மானிய படை வீரர்கள் வீசினார்கள்.
சிலமணி நேரப்போரிலேயே பெரும் சேதமடைந்த பால்கன் படை உஸ்மானிய படையிடம் சரணடைந்தது.
எத்திரின் நகரை பிடித்ததும் அதனை ஐரோப்பிய பகுதிகளின் தலைநகரமாக உஸ்மானிய அரசு அறிவித்தது.
பால்கன் நாடுகள் தங்களை சூழ இருந்த ஆபத்தை உணர்ந்து கொண்டனர்.
உஸ்மானிய பேரரசின் எழுச்சியையும் ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டையும் அறிந்த ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாடுகளை உஸ்மானிய படைகள் பிடித்து விடுமே என்று அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினர்.
கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவு ஐரோப்பிய பால்கன் நாடுகளை காப்பாற்றியதா?
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.