Home செய்திகள் நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் மீன்பிடியை ஒழுங்குபடுத்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் மனு..

நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் மீன்பிடியை ஒழுங்குபடுத்த இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் மனு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் (மன்னார் வளைகுடா) பகுதியில் நாட்டுப் படகு, விசைப்படகு மீன்பிடி முறையை முறைப்படுத்தக் கோரி மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மண்டபம் பாரம்பரிய விசைப்படகு மீனவர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

அம்மனுவில் கூறியுள்ளதாவது: மண்டபம் தென்கடல் பகுதியில் 150 சிறிய விசைப்படகுகள் மூலம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். கடந்த சில தினங்களாக எங்கள் பகுதி மீனவர்கள் 3 கடல் மைல் எல்லை மீன்பிடிப்பிற்கு இடையூறாக தொழில் செய்வதாக ஒரு சில அரசியல் கட்சிகள் தூண்டுதல், தவறான வழிகாட்டுதல் பேரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்களை போராட்டத்திற்கு தூண்டுபவர்கள் மீனவர்கள் இல்லை. தனது சுய லாபத்திற்காக விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இடையே பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர். மீன்பிடி தொழிலை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் நம்பி வாழ்கின்றன. 1983 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நாட்டுப்படகுகள் நிலை வேறு. தற்போதுள்ள நாட்டுப்படகுகள் நிலை வேறு. அன்று இருந்த நாட்டுப்படகுகள் இன்ஜின் 20 எச்பி எனப்படும் குதிரை திறன் கொண்டவைகளாக இருந்தன. ஆனால், தற்போதுள்ள நாட்டுப்படகு இயந்திரங்கள் விசைப்படகை விட அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. நிலைமை இவ்வாறிருக்க, எங்கள் பகுதி விசைப்படகு மீனவர்களை தொழில் செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் சிலர் செயல்பட்டு வருகின்றனர். எங்கள் மீனவ தொழிலாளர்கள் எப்போதும் தொழில் செய்வது போல் நாட்டுப் படகு மீனவர்களுக்கு எவ்வித இடையூறின்றி தொழில் செய்யவும், எங்கள் வாழ்வாதாரத்தை ஈடு செய்யவும் , வட கடல் ( பாக் ஜலசந்தி) பகுதியில் விசைப்படகுகள் 3 நாட்கள், நாட்டுப்படகுகள் 4 நாட்கள் தொழில் செய்து வருகிறோம். இது போல் தென் கடலில் விசைப்படகுகள் 3 நாள் , நாட்டுப்படகுகள் 4 நாள் மீன்பிடி தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தலைவர் ஜெ.சகுபர் அலி, செயலாளர் எம்.முஜிபுர் ரகுமான், பொருளாளர் எஸ். அன்வர் தீன், கவுரவ ஆலோசகர் எம். அப்துல் காதர், துணை தலைவர் எம்.ரசூல் தீன், துணை செயலாளர்கள் கே. அம்ஜத் அலி கான், எஸ்.முத்துகுமார், துணை பொருளாளர் எம்.சீனி சகுபர் சாதிக் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com