தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் முல்லை பெரியாறு வாய்க்கால் திட்ட விளக்க பொதுக்கூட்டம்..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்காபுரத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் முல்லை பெரியாறு வாய்க்கால் திட்டம் குறித்த பொதுக்கூட்டம் 02.02.19 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதில் முல்லையாற்றில் இருந்து சுமார் 47 கி.மீ. தூரம் குழாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து வறட்சி நிலவுகின்ற ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் வகையில், முல்லை பெரியாறு வாய்க்கால் திட்டம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாரயணசாமி கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் முல்லையாற்றில் இருந்து குழாய் மூலம் கண்டமனூர், கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி வழியாக ஏத்தக்கோவில் வரை உள்ள கிராமப்பகுதிகளில் இருக்கின்ற கண்மாய், குளம் மற்றும் ஊரணிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

இதனால் சுமார் 4 லட்சம் விவசாய குடும்பங்கள் பயனடைவார்கள். எனவே இத்திட்டத்தினை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.

“தவறினால் தேர்தலில் இப்பகுதி மக்கள் எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 60 வயதுக்கு மேலுள்ள விவசாயிகளுக்கு அரசு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் தர வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறோம் என்றார். ஆனால் இரண்டு ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவித்து விவசாயிகளை பிச்சைக்காரர்களாக சித்தரிப்பதாக கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்