Home செய்திகள்உலக செய்திகள் ஈத்தாலஜி’ (Ethology) என்ற சொல்லை அறிமுகப்படுத்திய அமெரிக்க பூச்சியியல் வல்லுநர் வில்லியம் மார்ட்டன் வீலர் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 19, 1937).

ஈத்தாலஜி’ (Ethology) என்ற சொல்லை அறிமுகப்படுத்திய அமெரிக்க பூச்சியியல் வல்லுநர் வில்லியம் மார்ட்டன் வீலர் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 19, 1937).

by mohan

வில்லியம் மார்ட்டன் வீலர் மார்ச் 19, 1865ல் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி நகரில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை அரசுப் பள்ளியிலும், பிறகு ஜெர்மன்-இங்கிலீஷ் அகாடமி பள்ளியில் பயின்றார். இந்த பள்ளியில் இருந்த அருங்காட்சியகம் மிகவும் பிடித்துப்போனதால், நீண்ட நேரம் அங்கேயே இருப்பார். பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் எலும்புக்கூடுகளை வைப்பதற்காக ‘வார்ட்ஸ்’ நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். மாதிரிகளை வகைப்படுத்தி ஒழுங்குபடுத்த அவர்களுக்கு உதவி செய்தார். படிப்பை முடித்த பிறகு, நியூயார்க்கில் உள்ள அவர்களது நிறுவனத்திலேயே உதவியாளராக வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றிய போது பறவைகள், பாலூட்டிகள் பலவற்றை அடையாளம் கண்டார்.

வில்லியம் தான் பயின்ற பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியாளராக 5 ஆண்டுகள் வேலை செய்தார். சொந்த ஊரில் இருந்த அருங்காட்சியகத்தில் இயக்குநராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். உட்ஸ் ஹோல்’ சோதனைக் கூடத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். கிளார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். மூனிச், நேபல்ஸ், லீக் ஆகிய இடங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

விலங்குகளின் பண்புகள் பற்றிய துறையைக் குறிக்கும் ‘ஈத்தாலஜி’ (Ethology) என்ற சொல்லை ஒரு கட்டுரையில் பிரபலப்படுத்தினார். கிளிஞ்சல்கள், கடற்பாசிகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை சேகரித்து வகைப்படுத்தினார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, எறும்புகள் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினார். கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ‘மரிகோபா’ எறும்பு உட்பட பல பூச்சி இனங்களை வகைப்படுத்தியுள்ளார். நியூயார்க்கில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சி யக காப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, ஆராய்ச்சிகளில் மேலும் தீவிரமாக ஈடுபட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியபோதும் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

எறும்புகளின் வகைப்பாடு, அமைப்பியல், சூழலியல், அவற்றின் பழக்க வழக்கங்கள், சமூக குணங்கள் ஆகியவை தொடர்பாகவே இவரது பெரும்பாலான ஆய்வுகள் இருந்தன. எறும்புகளின் சமூக நடத்தை பூச்சியியல் உலகிலேயே மிகவும் சிக்கலானது என்று கண்டறிந்தார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் திரட்டப்பட்ட மாதிரிகளைக் கொண்டு இவரது கண்டுபிடிப்புகள் அமைந்தன. சிங்க எறும்பு (Antlion), பறக்கும் பூச்சியினங்களின் லார்வா ஆகியவற்றில் உயிரியியல் அடிப்படையிலான முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தினார்.

எறும்புகள், பூச்சிகளின் பழக்க வழக்கங்கள், சமூக குணங்கள் குறித்து இவர் எழுதிய நூல்கள் உலகப் புகழ்பெற்றன. 400க்கும் மேற்பட்ட ஆய்வு படைப்புகளை வெளியிட்டுள்ளார். 1922ல் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் டேனியல் ஜீரோ எலியட்’ பதக்கம், 1931ல் லீடி விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சிறந்த ஆசிரியர், எழுத்தாளர், பூச்சியியல் வல்லுநர், ஆராய்ச்சியாளர் என பன்முகத்திறன் கொண்ட வில்லியம் மார்ட்டன் வீலர் ஏப்ரல் 19, 1937ல் தனது 72வது அகவையில் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com