Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ராகுல் காந்தி நிச்சயமாக தமிழ் மண்ணின் பிரச்சினையை புரிந்து கொண்டு செயல்படுவார் – கனிமொழி பேச்சு..

ராகுல் காந்தி நிச்சயமாக தமிழ் மண்ணின் பிரச்சினையை புரிந்து கொண்டு செயல்படுவார் – கனிமொழி பேச்சு..

by ஆசிரியர்
கோவில்பட்டியில் திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் கனிமொழி பேசும்போது, இதற்கு முன்பு நடந்த தேர்தல்களை விட, இந்த தேர்தல் மிக முக்கியமானது. இதுவரை நாம் சந்தித்த தேர்தல், அரசியல் கட்சிகளை எதிர்த்து நின்று தேர்தல் களத்தில் களமாடிய தேர்தல். ஆனால், இன்று இந்தியா என்ற அமைப்பை பாதுகாக்க நாம் போராடிக்கொண்டிருக்கிற தேர்தல். ஒவ்வொருவரின் கருத்து சுதந்திரத்துக்காக போராடி வேண்டிய தேர்தல். இந்த நாட்டின் ஜனநாயகத்தை, அடிப்படையை காப்பாற்றுவதற்காக, பெண்களின் உரிமைக்காக நாம் சந்திக்கக்கூடிய தேர்தல். இதை முற்றிலும் அழிக்கக்கூடிய எதிரிகளை இந்த தேர்தலில் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். அதை இந்த நாட்டின் அடிப்படையான எல்லா மதங்களையும் அணைத்து, ஒருங்கிணைத்து, சகோதர்களாக ஒன்றாக வாழ்வோம். ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மொழி பேசக்கூடிய மக்களும், இந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற உணர்வை குளைப்பதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கக்கூடியவர்களுக்கும், நமக்கும் நடக்கக்கூடிய கருத்தியல் தேர்தலாகும். இந்த தேர்தலில் எதிரிகள் வெற்றிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். வாக்கு இயந்திரங்களில் இருந்து மக்களுக்கு இடையே சாதி, மத பிரச்சினைகளை உருவாக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எதையும் செய்து வெற்றியை தமதாக்கி கொள்ள அவர் துடிக்கக்கூடியவர்கள். நாம் எதையும் எதிர்க்கக்கூடிய வல்லமை பெற்றவர்களாக, அந்த மனம் பெற்றவர்களாக தேர்தலை சந்திக்க வேண்டும்.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் இந்த புரிதலோடு தான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். தமிழகத்தில் திராவிட இயக்கம், இங்குள்ள கட்சிகள் எல்லாம் எதற்காக போராடி, எந்த வளர்ச்சியை, சமூக நல்லிணக்கத்தை, சமூக நீதியை உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டு, நம் வீட்டு பிள்ளைகளும் படிக்கக்கூடிய வாய்ப்பை, அனைவரும் சமம் என்ற நிலையை, பெண்களுக்கு சம உரிமை இருக்கிற என்ற மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறோமோ, அதையெல்லாம் இங்கே இருக்கக்கூடிய இந்த ஆட்சி குளைக்க கூடிய ஒன்றாக செயல்படும் என்பதை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.
உதாரணத்துக்கு, இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இதுவரை இந்தியாவில் இல்லாத அளவுக்கு மதக்கலவரங்கள் இந்த 5 ஆண்டுகளில் நடந்துள்ளன என்பதை உலகில் உள்ள நிறுவனங்களெல்லாம் குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றன. சாதியின் பெயரால் மக்களுக்கு இடையே வேறுபாடுகளை உருவாக்கி, அவர்கள் பாதிக்கப்படக்கூடிய, ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடிய நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த நாட்டில் ஹந்தி மொழி மட்டும் தான் பேசப்பட வேண்டும். வேறு மொழிகள் அதன் அடையாளங்களை இழந்து விட வேண்டும். தமிழகத்தில் தமிழ் இருக்கக்கூடாது. ஹிந்தி தான் நாடு முழுவதும் பேசக்கூடிய ஒற்றை மொழியாக இருக்க வேண்டும் என்று, அனைவரின் அடையாளங்களை துடைத்து எறியக்கூடிய எண்ணம் கொண்டவர்கள் தான் மத்தியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதாவினர்.
பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஏதாவது ஒரு வளர்ச்சி வந்துள்ளதா?. நாடு முழுவதும் ஓரே வரி என கூறி ஜி.எஸ்.டி. கொண்டு வந்தனர். அதில் ஆயிரம் குழப்பங்கள். இங்கே கோவில்பட்டியில் கடலைமிட்டாய் செய்யக்கூடியவர்கள் கூட கிட்டத்தட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு, அந்த சின்ன தொழிற்சாலைகளை மூடிவிட்டு போகும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசாங்கம் ஒரு வரியை மக்கள் மீது திணித்து எல்லா சிறிய தொழில்களும், வியாபாரங்களும் நசிந்து போகும் நிலையை கொண்டு வந்திருக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற பயன்படாமல் இந்த ஆட்சி, குற்றவாளிகளை காப்பாற்ற துடித்து கொண்டிருக்கிறது என்பதை கண்கூடாக காண முடிகிறது. ஸ்டெர்லைட் பிரச்சினையில் மக்கள் 100 நாட்கள் போராடினர். 100வது நாள் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நடந்து வரும்போது, அவர்களை தாக்க அரசாங்கம் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொல்கிறது. இப்படி மக்களுக்கு எதிராக உள்ள இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் வாக்கு வாங்க முடியும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது பொய். இது பெரியாருடைய மண். திராவிட இயக்கம் வளர்ந்து இருக்கிற இடம். இங்கே ஒவ்வொருவருடைய மனதில் இவர்களுக்கு எதிரான சிந்தனை தான் வளம் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவில்லை. இப்போது தேர்தலுக்காக வருகிறார். தமிழகம் என்ற மாநிலம் இருந்தது என்றே அவர் தெரியவில்லை. அவருக்கு தெரிந்தெல்லாம், வெளிநாடுகள் தான். அவர் சுற்றிப்பார்க்காத வெளிநாடுகளே இல்லை என்ற சொல்லக்கூடிய அளவுக்கு வெளிநாடுகளில் மட்டுமே பிரதமராக இருக்கக்கூடியவர். இந்த தொகுதியில் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்தவர் போட்டியிடுகிறார். அதிமுக போட்டியிட்டாலே, இங்கே இருக்கக்கூடிய நிலை என்ன என்பது அவர்களுக்கு தெரியும். டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு அனைத்து நிலைகளிலும் விரோத கொள்கைகளை தணிக்க கூடிய, துரோங்களை செய்து கொண்டிருக்கிற இரண்டு பேரும் கூட்டணி வைத்துள்ளனர். இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக காட்டுவேன் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கக்கூடிய நிலையை பார்க்கிறோம்.
இங்குள்ள விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய விதத்தில், விளை பொருட்களை பாதுகாக்க வேண்டிய கிடங்குகளை திமுக உருவாக்க நடவடிக்கை எடுக்கும். கயத்தாறு, கோவில்பட்டி பகுதிகளில், பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு இங்குள்ள விமான நிலையத்தை மீண்டும் செயல்படுத்த, குறைந்தபட்சம் பொருட்களை ஏற்றிச்செல்லும் விமான நிலையமாக செயல்பட சாத்தியத்தை உருவாக்கி தருவோம். தீப்பெட்டி, பட்டாசு சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சினைகளை களைய, திமுகவும், பிரதமராக வரக்கூடிய ராகுல் காந்தி நிச்சயமாக தமிழ் மண்ணின் பிரச்சினையை புரிந்து கொண்டு செயல்படுவார், என்றார் அவர்.
தென்காசி மக்களவை தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சீனிவாசன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!