Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தூத்துக்குடி பகுதியில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம்…

தூத்துக்குடி பகுதியில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம்…

by ஆசிரியர்
பாஜகவின் கூலிப்படை அதிமுக – கனிமொழி பேச்சு
விளாத்திகுளத்தில் திமுக தேர்தல் காரியலாயம் திறப்பு விழா நடந்தது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கலந்து கொண்டு தேர்தல் காரியலாயத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து வேம்பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கனிமொழி கலந்து கொண்டு பேசுகையில் என் குடும்பம் என்பது எல்லா தமிழர்களையும் உள்ளடக்கிய ஒன்று. அதனை ஒரு வளையத்துக்குள் அடக்கி விட முடியாது என தலைவர் கருணாநிதி கூறுவார். நாடு நமதே, நாற்பது நமதே என்ற உணர்வோடு தேர்தலில் பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு அனைவரும் பணியாற்ற செய்ய வேண்டும். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மிக முக்கியமானது.
அதிமுக ஆட்சியில் மக்கள் எந்தளவுக்கு படாதபாடு பட்டு கொண்டுள்ளனர். பாரதிய ஜனதாவிடம் தனது கட்சியையும், ஆட்சியையும் அடகு வைக்கும் நிலையில், அவர்கள் என்ன செய்தாலும் அதன் கூலிப்படையாக செயல்பட்டு கொண்டிருக்கிற ஒரு கீழ்தரமான நிலை அதிமுகவில் உருவாகி உள்ளது. அதனை புரிந்து கொண்டு நாம் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.
மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். ஆட்சி மாற்றம் வேண்டும். மத்தியில் உள்ள நரேந்திர மோடி பெயரை சொன்னாலே மக்களிடமிருந்து என்ன விதமான உணர்வு வெளிப்படுகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது. அதே போல், தலைவர் கருணாநிதி மறைந்தபோது, அவரை அடக்கம் செய்யக்கூடிய அந்த இடத்துக்கு கூட திமுகவையும், தலைவர் ஸ்டாலினையும் எந்தளவுக்கு எடப்பாடி சித்ரவதை செய்தார். அந்த இடம் கிடைக்கக்கூட வழியில்லாமல் என்ன கஷ்டத்தை நமக்கு தந்தார் என்பது திமுகவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அது மறக்காது, நினைவில் இருக்கும்.  இதனை ஞாபகம் வைத்துக்கொண்டு நாம் வேலை செய்தாலே போதும். அந்த உணர்வை எந்தகாலத்தில் நாம் விட்டுவிட முடியாது.
மக்கள் வாக்குச்சாவடிக்கு வர முடியாததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். மக்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேண்டும். மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க செய்ய ஆளும் கட்சியினர் வேலை செய்வார்கள். அதையெல்லாம் தாண்டி வெற்றி என்பது நமதாக வேண்டும். மக்களின் வெறுப்பை, ஏமாற்றத்தை, கோபத்தை வாக்குகளாக மாற்றக்கூட திறமை உங்களிடம் தான் உள்ளது.
நான் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இங்குள்ள விவசாயிகளின் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன். மதுரை – தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் 30 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்துவற்கான அத்தனை முயற்சிகளையும் மக்களவை உறுப்பினராக நான் செயல்படுத்தி காட்டுவேன். மிளகாய், வெங்காய் போன்ற விவசாயிகளுக்கு வேண்டியளவு இடங்களையும், உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கக்கூடிய சந்தைகளை உருவாக்கி தருவதற்கு முயற்கிளை மேற்கொள்வேன். மேலும், இங்கு இருக்கக்கூடிய தண்ணீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுத்து சரி செய்து தருவேன், என்றார் அவர்.
விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ஏ.சி.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்..ஆர் ராமசந்திரன், , திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இடைத்தேர்தல் பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் பணிமனையை தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி திறந்து வைத்தார்
விளாத்திகுளம் சட்டமன்றத் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் பணிமனையை தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி திறந்து வைத்தார். விழாவில் எம்.எல்.ஏக்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், கீதா ஜீவன், விளாத்திகுளம் வேட்பாளர் வசந்தம். ஜெயக்குமார், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுஉறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், செய்தி தொடர்பு இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக தலைமையிலான கூட்டணி எந்த சமயத்திற்கும் எதிரானது கிடையாது – வைகோ
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக கோவில்பட்டியில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, நடைபெற உள்ள தேர்தல் ஜனநாயகமா அல்லது பாசிசமா என்ற கேள்வியை முன் வைக்கிற தேர்தல். நாங்கள் பாசிச பாதையில் தான் செல்கிறோம் என் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பு உள்ள ஒருவரே கூறியுள்ளார்.
வைணமும், சைவமும் தமிழை வளர்த்து என்று நான் கூறினேன். திமுக தலைமையில் உள்ள இந்த அணி எந்த சமயத்துக்கும் எதிரானது அல்ல. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், தமிழகத்தில் உள்ள ராமர் கோயில்களின் மூலஸ்தான கற்பகிரக சிலைகளை அமெரிக்கா வாஷிங்டனில் நடைபெற்ற இந்திய திருவிழாவுக்கு அனுப்புவதற்கு 1980 களில் தொடக்கத்திலே இந்திய அரசு முடிவெடுத்தபோது, அதனை எதிர்த்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து, கோயில் சுவரில் கால் பட்டுவிட்டால் உடனே தொட்டு கும்பிடுகிறான் பக்தன். மூலஸ்தானத்து சிலைகளை கொண்டு செல்கிறீர்களே பயணத்தில் சேதம் ஏற்பட்டுவிடாதா, மாதிரி வடிவங்களை கொண்டு போகலாமே என்றபோது, நாங்கள் காப்பீடு செய்துள்ளோம் என்றார் அமைச்சர். பக்திக்கு என்ன ரேட் வைத்துள்ளீர்கள் என்று கடுமையாக கேட்டேன்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமலவதி திரிபாதி நண்பகல் இடைவேலையின் போது என்னை தட்டிக்கொடுத்து இந்த சபையில் ஒரு உருப்படியான தீர்மானத்தை கொண்டு வந்தாய் என்றார். அனைத்து கட்சியினரும் ஆதரித்த அந்த முடிவை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தவன் நான். இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால், இன்றைக்கு மதம் என்ற போர்வையில் பிற மதத்தினரை வாழ விடமாட்டோம் என்ற வெறுப்புணர்வு நாட்டுக்கு பேராபத்தாக முடியும்.
இதே இடத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு எங்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. மக்காச்சோளம் போட்டோம் மண்ணாகிவிட்டது. தானியங்கள், பருத்தி, மிளகாய் ஆகியவை பயிரிட்டோம் அதிலுமே வருமானமில்லை. பயிர் காப்பீட்டுக்கு நாங்கள் பிரிமீயம் செலுத்தினோம். எங்களுக்கு பணம் வரும் என்று எதிர்பார்த்தோம். எவருக்கும் பணம் கிடைக்கவில்லை என விவசாயிகளை திரட்டி நான் முழக்கமிட்டேன்.
இந்த பயிர் காப்பீடு திட்டம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டத்தில் யார் பயன்பெற்றிருக்கிறார்கள் என்றால், அம்பானி மற்றும் எஸ்.ஆர் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி லாபம் பெற்றிருக்கின்றன. விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எப்படி வாழ்க்கையை நகர்த்து என்று விவசாயிகளுக்கு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சேவை மற்றும் சரக்கு வரி என்று இந்திய அரசு கொண்டு வந்த திட்டத்தால், வணிகத்துறையே பாழாகிவிடும் அளவுக்கு, ஒவ்வொரு பெட்டிக்கடையும் ஒரு ஆடிட்டரை வைத்து கணக்கு வழக்குகளை சமர்ப்பிப்பார்களா. ஒவ்வொரு பெட்டிக்கடையும் நமக்கு ஆதரவாக பிரச்சார மேடையாகி விட்டது. வரும் மக்களிடம் சொல்கிறார்கள், மோடி தலைமையிலான அரசு வந்து, எங்கள் வாழ்வே நசித்து போய்விட்டது, நலிந்து போய்விட்டது என வணிகர்கள், வர்த்தக சங்க பேரவையினர் இந்த குரலைத்தான் எழுப்புகின்றனர்.
அந்நிய முதலீடுகளை இங்கு கொண்டு வந்து, பெரிய நிறுவனங்கள் மூலமாக சிறு வணிகங்கள் நடத்தக்கூடிய வியாபாரிகளை வாழ்வை நாசமாக்கக்கூடிய திட்டத்திலே தான் மத்திய அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விவசாயிகள் வேதனை, ஒரு பக்கம் வணிகர்களின் துயரம். வேலையில்லா திண்டாட்டத்துக்கு எந்த தீர்வை இந்த அரசு கொண்டு வரவில்லை. அதே நேரத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் கோடான கோடி பணம் சேர்க்கின்ற விதத்தில் எல்லா திட்டங்களும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்த நாட்டு மக்களுக்காக ஊழியம் செய்ய கூடிய வேலைக்காரன் நான். தமிழகத்தில் எங்கே மக்கள் துன்பப்படுகிறார்களோ அவர்கள் துன்ப கண்ணீரை துடைக்கப்பதற்காக ஓடோடி சென்று பாடுபடுகின்ற ஒரு வேலைக்காரன் நான். அப்படி ஒரு போராளியாகவே நான் வாழ்கிறேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து 22 ஆண்டுகளாக போரிட்டோம். அறவழியில் போரிட்டோம். ஆனால், கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் போகிறபோது, திட்டமிட்டே, அவர்கள் வருவதற்கு முன்பாகவே அங்குள்ள காவல்துறையினர் வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டார்கள். இதை நான் சொல்லவில்லை. முன்னாள் உயர்நீதிமன்ற 3 நீதிபதிகளும், முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள் 3 பேரும், 2 ஆய்வு அதிகாரிகள் மற்றும் குழுவினர் 10 நாட்கள் தூத்துக்குடியில் இருந்து ஒவ்வொரு பகுதியாக சென்று பார்த்து அளித்த அறிக்கையில் இது திட்டமிட்ட படுகொலை. இனிமேல் எவரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்க்க கூடாது என்று மிரட்டுவதற்காக, அச்சுறுத்துவதற்காக, அந்த நிறுவனத்துக்காக தமிழக அரசு காவல்துறையை கைக்கூலிப்படையாக மாற்றிய அநீதியும், இப்படிப்பட்ட கொடுமையும் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்ததே இல்லை. அதனால் தான் ஜாலியன் வாலாபாத் என்று குறிப்பிட்டேன்.
இதே வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எல்லா விவசாயங்கள் அழிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தில் நான் இருக்கிறேன். மேகேதாட்டுவில் அணை கட்ட சொன்னது மத்திய அரசு, இங்குள்ள அரசு என நான் குற்றஞ்சாட்டுகிறேன். மேகேதாட்டுவில் அணை கட்டிவிட்டால் ஒரு சொட்டு தண்ணீர் மேட்டூருக்கு வராது. 19 மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் இல்லாமல் போகும். சென்னை மாநகருக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் போகும். விவசாயம் அடியோடு அழிந்து போகும். 25 லட்சம் ஏக்கர் பாசனம் இல்லாமல் போகும். தஞ்சை தரணி பஞ்ச பிரதேசமாகும்.
அங்குள்ள நிலங்களை அம்பானி, அதானி நிறுவனங்கள் விலைக்கு வாங்கும். பூமிக்கடியில் இருந்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட படிம எரிவாயுவை எடுத்து மத்திய அரசுக்கு வாரி கொடுக்கும். அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் கிடைக்கும். இதுதான் திட்டம். இவ்வளவு பெரிய பேராபத்து தமிழகத்துக்கு வந்ததே கிடையாது. இந்த அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள உணர்வுகளை அழிக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் அடித்தளத்தை சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.
நீட் தேர்வு கொண்டு வந்து ஏழை எளிய வீட்டு பிள்ளைகள் படிப்பில் கொள்ளி வைத்தார்கள். உலக போற்று உத்தமர் காந்தியின் உருவத்தை செய்து, அதில் துப்பாக்கியால் சுடுவது போல் சுட்டு, அதிலிருந்து ரத்தம் போன்ற  சிவப்பு திரவியம் வழியவிட்டு, கீழே போட்டு தீ வைத்தனர். இதற்கு பிரதமர் கண்டனம் தெரிவித்தது உண்டா?. இது தான் எங்களுக்கு அச்சமூட்டுகிறது.
தமிழகத்தில் நடைபெறுகிற அரசு ஊழல் அரசு. மத்திய அரசுக்கு கைகட்டி சலாம்போட்டு எதையும் எதிர்க்க துணிவற்ற அரசு. எனவே தான் இரண்டு அரசுகள் மாற வேண்டும். இந்தாண்டு இந்திய அரசியல் வரலாற்றில் மாற்றங்களின் ஆண்டாக இருக்கும்.
புல்வாமா சம்பவத்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை உயர்ந்துவிட்டது என கர்நாடகத்திலே எடியூரப்பா கூறுகிறார். அது தானே நரேந்திரமோடியின் திட்டக்குரல். முப்படைகளில் முக்கியமானது விமானப்படை. அதற்கு விமானங்கள் வாங்கியதில் பேரம் நடத்தலாமா?. மத்திய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டதை புறந்தள்ளிவிட்டு, ஆகாய விமான உதிரிபாகங்களின் ஒரு ஆணி கூட செய்வதற்கு அனுபவமில்லாத அனில் அம்பானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட ஏற்பாடு செய்யலாமா?. அப்படியென்றால் பாதுகாப்பு உங்களுக்கு முக்கியமில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்துகளை குவிப்பது உங்களுக்கு முக்கியம்.
அதிமுக வீட்டு வீடு பணம் கொடுத்தால்  ஓட்டு வந்துவிடும் என நினைக்கின்றனர். ஏமாந்துபோவார்கள். மக்கள் யாரும் தங்களை விற்பதற்கு தயாராக இல்லை. பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் பெண் பிள்ளைகளை நடுங்க வைக்கிறது. இதற்கு காரணம் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் என்ற கேள்வி வெளியே வருகிறது.
இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி நாடாளுமன்றத்தில் பெண்களின் உரிமைக்காக, வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, தமிழக வாழ்வாதாரங்களை பாதுகாக்க எதிராக குரல் கொடுத்தவர். அப்படிப்பட்ட பொது சேவைக்காக தன்னை  அர்ப்பணித்து கொண்டுள்ள கனிமொழியை லட்சக்கணக்கான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார் அவர்.
பணமா ? குணமா ? – முடிவு செய்யுங்கள் – விளாத்திகுளம் திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார்
விளாத்திகுளத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி, எம்.எல்.ஏ.க்கள் கே.கே.எஸ்.எஸ்..ஆர் ராமசந்திரன், கீதாஜீவன் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதில் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வசந்தம் ஜெயக்குமார் பேசுகையில் எதிர்கட்சியினர் கூட திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு கேட்கும் நிலை உள்ளது. எனக்காக அவர் வாக்கு சேகரிக்க வேண்டும், அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவர்.நெல்லுக்கு பாயும் போது இந்த புல்லுக்கு கொஞ்சம் பாயும் என்பது போல நான் தன்னாலே கரை சேர்ந்து விடுவேன், 96ல் இந்த தொகுதியில் திமுகவைச் சேர்ந்த ரவிசங்கர் வெற்றி பெற்றார். அதன் பின்பு வரலாற்றினை படைக்க இந்த தேர்தலில் உங்கள் விட்டுபிள்ளையாக ஆதரிக்க வேண்டும், என் மீது, என் நிர்வாகிகள் மீது விருப்பு வெறுப்பு இருந்தாலும், தனிப்பட்ட முறையில் சங்கட,சச்சரவுகள் இருந்தாலும் உங்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். அதை பெரியதாக எடுத்து கொள்ளமால், உங்கள் வீட்டுபிள்ளையாக எனக்கும், நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு அளித்து அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும், எந்நேரம் அழைத்தாலும், 24மணி நேரமும் பணி செய்ய கடமைப்பட்டு இருக்கிறேன். காசு பணத்தினை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம், நீங்கள் வர இருக்கிற தேர்தலில் பணத்தையா , குணத்தையா, வேட்பாளரா ? பணமா என முடிவு செய்யுங்கள், உங்களை நம்பி உள்ளேன், வாய்ப்பு கொடுங்கள் என்றார்.
திமுக தேர்தல் அறிக்கையில்  ஸ்டெர்லைட் விவகாரத்தை குறிப்பிடாதது ஏன் ? ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? ஸ்டாலினை நோக்கி  தமிழிசை கேள்வி ?

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி சார்பில், தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழக பா ஜ க தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று   தூத்துக்குடியிலுள்ள தனியார் ஹோட்டலில்  செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில்

எதிர் அணியினர் தரம்தாழ்ந்த விவாதம் செய்தாலும் நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம்  நேர்மறை அரசியலை எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் எங்களது நிலைபாடு

மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் தமிழகத்திற்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கும் என்பதை இன்று எங்கள் கூட்டணி நிரூபித்து வருகிறது.

தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்த வைகோ பாஜக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை, இங்குள்ள மக்களுக்கு பயிர் பாதுகாப்பு திட்டம் கிடைக்கவே இல்லை என்று பல பொய்களை அடுக்கியிருக்கிறார்.

ஆனால், பயிர்பாதுகாப்பு திட்டத்தில் அதிகம் பலன் அடைந்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம்

அதுமட்டுமல்ல காங்கிரஸ் கட்சிதான் சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டு வந்தார்கள். சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுத்த கட்சி பாஜக தான்

தமிழகத்தில் எதிர் கட்சியினரிடம் நாகரீகம் மிக மிக குறைந்து வருகிறது, தமிழகம் நாகரீக அரசியலுக்குள் வர வேண்டும்.

என் மீது ஒரு சின்ன களங்கம் கூட சொல்ல முடியாது, நான் வெளிப்படையான அரசியல் வாழ்க்கையை நடத்தி வருகிறேன்.

தமிழக மக்களின் வாழ்வியலில் ஒன்றான மத நம்பிக்கையை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் குறைகூறி வருவதால் மக்கள் அவர்களை புறக்கணிப்பார்கள்

திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையின் நிலைபாட்டை பற்றி குறிப்பிடவில்லையே ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் திமுக இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறார்கள் என்றார்.

*ஊழல் மற்றும் ஊழலுக்கு எதிராக நேர்மையான அரசியலை மேற்கொண்டு வருகிறோம்.

பாராளுமன்ற தகவல் படி மாநிலங்களவையிலே மிகக் குறைவான நாட்களே சென்றுள்ள மூன்று நபர்களில் ஒருவராக இருந்துள்ள எதிர் கூட்டணி வேட்பாளர் கனிமொழி எப்படி மக்களவையில் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றார்.

இந்த தேர்தல் ஊழலுக்கும்- ஊழலற்ற தன்மைக்கும், நேர்மையற்ற அரசியலுக்கும்- நேர்மைக்கும் இடையே நடக்கும் போட்டியாக கருதுகிறேன் எனவே எங்களை யாரும் குறை சொல்ல முடியாது என்றார்.

என்னை ஆதரித்து தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , பிரேமலதாவிஜயகாந்த் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.

வரும் 26ம் தேதி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வர இருக்கிறார் அன்றைய தினம் விஷன் டாக்குமேண்டரி வெளியிடப்படும், என்றார்

மேலும் கூறுகையில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக அரசகுமாரை கட்சி அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி விசைபடகு மீனவர்கள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து  கோரிக்கைகள் வைத்தனர்.

இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக பொறுப்பாளர் ,பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரச குமார், கரு.நாகராஜ், எம்.என்.ராஜன், முரளி யாதவ், தேசிய குழு உறுப்பினர் சந்தனகுமார்,

தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலாஜி, தொகுதி பொறுப்பாளர் விஎஸ்ஆர் பிரபு, வர்த்தகஅணி சிவராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!