![IMG-20170218-WA0065[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/02/IMG-20170218-WA00651.jpg?resize=678%2C381&ssl=1)
இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் நெடுஞ்சாலையில் சக்கரக்கோட்டை கண்மாய் அருகாமையில் உள்ள முனியீஸ்வரர் கோயில் எதிரே ஓட்டப் பாலம் மதகு அருகே அபாயகரமான பள்ளத்திற்கு எவ்வித தடுப்பு வேலியும் அமைக்கப்படாமல் நெடுஞ்சாலை துறையினரால் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் மக்கள் செய்தி தொடர்பாளர், சட்டப் போராளி தீன் இஸ்மாயில் கூறும் போது ”இரவு நேரங்களில் பேருந்துகளுக்கு வழி விடுவதற்காக ஓரம் கட்டுபவர்களும், கோயிலுக்கு செல்வதற்காக திருப்ப முயற்சிக்கும் வாகனங்களும் விபத்துக்களில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
தினமும் வேலை நிமித்தமாக இராமநாதபுரம் செல்வதால் இந்த அபாய பள்ளத்தின் கோர முகம் எனக்கு நன்றாகவே தெரியும். என் கண்ணெதிரே பலர் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாவதை தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்க உள்ளோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையில் தடுப்பு வேலி அமைத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.
You must be logged in to post a comment.