ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்களுடன் காங்கிரஸ் கட்சி நிற்கும் – காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சீவ் தத்..

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.சீனிவாசன் தலைமை வகித்தார். காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சீவ் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் கஜா புயலினால் விவசாயிகள், மீனவர்கள் பொது மக்கள் பாதிக்கப்பட்ட போது, காங்கிரஸ் கட்சியினர் நேரில் சென்று தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். ஆனால் பிரதமர் நரேந்திரா மோடி இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்கவில்லை, தமிழக முதல்வரும் தாமதமாக சென்று தான் கண்துடைப்புக்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பிரதமரும், முதல்வரும் ஒரே முகமூடியை அணிந்துள்ளனர். இவர்கள் மக்களுக்கு விரோதமானவர்கள், இரு ஆட்சிகளும் மக்களுக்கு விரோதமான ஆட்சி, சினிமா மற்றும் தொழில் அதிபர்கள் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க நேரமில்லை, மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு எதிரான அரசு, கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், தற்போது பா.ஜ.க அரசு தாங்கள் ஆளும் வட மாநிலங்களுக்கு திருப்பிவிட்டுள்ளது,இதனை தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. ஒரு பொம்மை அரசாக இந்த அரசு உள்ளது. டெல்லியில் மோடி இசைக்கும் இசைக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆடி வருவதாகவும், இவர்களுடைய ரிமோட் கண்ரோல் டெல்லியில் உள்ளது. கடந்த 4 ஆண்டு கால பாஜ ஆட்சியில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. ஒவ்வொருவர் வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என கூறியது, விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்படும் என கூறியது போன்ற எந்த வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை. மத்தியிலும், தமிழகத்தில் உள்ள மாநில அரசும் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சியே நடந்து வருகிறது. பாஜக ஆட்சியில் யாரூம் மகிழ்ச்சியாக இல்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, தூத்துக்குடி மாவட்டம் மக்களின் விருப்பம் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பது தான், ஆனால் மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்றி வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கில் இந்த அரசு தோற்று விட்டது.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் தனிதீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மக்களுக்காக ஆட்சி செய்வது தான் ஜனநாயகம், ஆனால் மத்திய, மாநில அரசுகள் பணக்காரர்கள், கார்பரேட் கம்பெனிகளுக்கான அரசாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்களுடன் காங்கிரஸ் கட்சி நிற்கும், வரும் மக்களவை தேர்தல் மிகவும் முக்கியமானது. இது தமிழக அரசியலுக்கும் முக்கியமானதாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், ஒவ்வொரு இடங்களிலும் வாக்குச்சாவடி முகவர் மிகவும் அவசியம். அதனை முதலில் செய்ய வேண்டும். டிச.31-ம் தேதிக்குள் விளாத்திகுளம் தொகுதியில் உள்ள முழு வாக்குச்சாவடி விபரங்களை தயாரித்து அனுப்ப வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாநில பொதுசெயலர் அருள் பெத்தையா, தொகுதி பொறுப்பாளர் பெத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் உமாசங்கர், சுப்புராயலு, பிரேம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் குணசேகரன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அய்யலுசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- அஹமது