Home செய்திகள் வெப்பநிலைசார்ந்த முதல் சீரிய விண்மீன்களின் வகைப்பாட்டு முறையை உருவாக்கிய அமெரிக்க பெண் வானியலாளர் ஆன்னி ஜம்ப் கெனான் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 13, 1941).

வெப்பநிலைசார்ந்த முதல் சீரிய விண்மீன்களின் வகைப்பாட்டு முறையை உருவாக்கிய அமெரிக்க பெண் வானியலாளர் ஆன்னி ஜம்ப் கெனான் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 13, 1941).

by mohan

ஆன்னி ஜம்ப் கெனான் (Annie Jump Cannon) டிசம்பர் 11, 1863ல் தெலாவேரில் உள்ள டோவரில் பிறந்தார். கப்பல்கட்டுநரும் அரசு மன்ற உறுப்பினருமான வில்சன் கெனான் என்பவருக்கும் அவரது இரண்டாம் மனைவியான மேரி ஜம்ப்புக்கும் மூத்த மகளாக பிறந்தார். முதலில் அவரது தாய்தான் இவருக்கு விண்மீன்குழுக்களைப் பயிற்றுவித்துள்ளார். அவரே இவரைத் தன் சொந்த ஆர்வங்களின்படி தன்வாழ்வை அமைத்துக்கொள்ள ஊக்கம் ஊட்டியுள்ளார். அவரது கல்வி கணிதம், வேதியியல், உயிரியல் புலங்களில் வெல்லெசுலி கல்லூரியில் அமையப் பரிந்துரைத்துள்ளார். கெனான் தாயின் அறிவுரையை ஏற்று தனக்கு விருப்பமான வானியல் கல்வியைப் பயின்றார். இவர் குழந்தையிலேயோ அல்லது வளரிளம்பருவத் தொடக்கத்திலேயோ காதுகேளாமையால் இன்னலுறலானாராம்.

உவெசுலிக் கல்லூரி என்று அழைக்கப்படும் வில்மிங்டன் கருத்தரங்கக் கல்விக்கழகத்தில், கெனான் ஒரு சிறந்த மாணவராகப் பயின்றார். குறிப்பாக்க் கணிதத்தில் நல்ல வல்லமை பெற்றிருந்தார். அவர் 1880ல் மசாச்சூசட்டில் உள்ள வெல்லெசுலிக் கல்லூரியின் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இது அமெரிக்காவிலேயே பெண்கள் பயிலும் மிகச் சிறந்த பள்ளியாகும். இங்கு இவர் இயற்பியலும் வானியலும் கற்றார். இவர் அப்போது அமெரிக்கவில் உள்ள மிகச் சில இயற்பியலாளருள் ஒருவரான சாரா பிரான்சிசு வைட்டிங் என்பவரிடம் கல்வி கற்றார். வெல்லெசுலிக் கல்லூரியில் முதல் மாணவியரானார். 1884ல் இயற்பியலில் பட்டம் பெற்றார். பிறகு பத்தாண்டுகளுக்கு வீட்டில் வந்து தங்கியிருந்தார். ஓரளவுக்கு, கெனானுக்குப் பிடித்த வேலை பெண்களுக்குத் தரப்படாததால் இது நேர்ந்தது.

இக்கால இடைவெளியில் அவர் ஒளிப்படக்கலையில் நல்ல பயிற்சி பெற்றார். 1892ல் ஐரோப்பா முழுவதும் சென்று தன் பிலேர்பேழைக் கருவியால் ஒளிப்படங்கள் எடுத்தார். அவர் விட்டுக்குத் திரும்பியதும் அவரது படங்களும் உரையும் ’’கொலம்பசின் காலடிச் சுவட்டில்’’ என்ற தலைப்பில் பிலேர் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இது மலராகச் சிகாகோவில் 1893ல் உலகக் கொலம்பிய காட்சியரங்கில் சுற்றுக்கும் விடப்பட்டுள்ளது. விரைவில் அவர் செங்காய்ச்சல் கண்டு முழு காதுகேளாமையுற்றார். இதனால் அவர் பிறரோடு பழக முடியாமல் போயிற்று. ஆகவே அவர் தன் முழுநேரத்தையும் தன்பணியில் செலுத்தலானார். இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. கெனானின் தாயார் 1894ல் இறந்துவிடவே அவரது வீட்டு வாழ்க்கை அரியதாகியது. எனவே வெல்லெசுலிக் கல்லூரியின் தனது முன்னாள் பயிற்றுநரான பேராசிரியர் சாரா பிரான்சிசு வைட்டிங்குக்கு அங்கே வேலை கிடைக்குமாவெனக் கேட்டுக் கடிதம் எழுதினார். வைட்டிங் இவரைத் தன் இளமியற்பியல் ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். இது அக்கல்லூரியில் இயற்பியலும் வானியலும் பயில வாய்ப்பளித்தது. வைட்டிங்கும் இவரைக் நிறமாலையியலைப் படிக்குமாறு தூண்டினார்.

வானியற் கல்வியைத் தொடர்ந்தவாறே, நல்லதொரு தொலைநோக்கியை அணுக, ’’சிறப்பு மாணவராக’’ இராட்லிளிஃப் கல்லூரியில் சேர்ந்தார். இராட்கிளிஃப் ஆர்வார்டுக் கல்லூரிக்கருகே அமைக்கப்பட்டிருந்தது. ஆர்வார்டுக் கல்லூரிப் பேராசிரியர்கள் அங்கே இராட்கிளிஃப் பெண்களுக்கு அவர்களது விரிவுரைகளை மீண்டும் ஆற்றினர். இதனால் அவர் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தை அணுகுதல் எளிதாகியது. 1896ல் எட்வார்டு சி. பிக்கெரிங் அந்த வான்காணகத்தில் கெனானைத் தன் உதவியாளராக அமர்த்திக்கொண்டார். கெனான் 1907 அளவில் தன் படிப்பை முடித்து வெல்லெசுலியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1896ல் “பிக்கெரிங்கின் பெண்” உறுப்பினர் ஆனார். இது வானில் உள்ள ஒளிப்படப் பருமை எண் 9 கொண்ட ஒவ்வொரு விண்மீனையும் படம்பிடித்து வரைந்து என்றி டிரேப்பர் அட்டவணையை நிரப்பி முடிக்க, ஆர்வார்டு வான்காணக இயக்குநரான எட்வார்டு சி. பிக்கெரிங் அமர்த்தும் பெண்பாலாருக்கான பணியாகும். மருத்துவரும் பயில்நிலை வானியலாளருமான என்றி டிரேப்பர் எனும் செல்வந்தரின் விதவை மனைவி இந்த வேலைக்கான நிதியை ஒதுக்கி இப்பணியை ஏற்பாடு செய்துள்ளார். இங்கு ஆய்வகத்தில் ஆண்கள் தொலைநோக்கியை இயக்கிப் படமெடுக்க, பெண்கள் அத்தகவல்களை ஆய்வு செய்து வானியல் கணக்கீடுகளைச் செய்வர். மேலும் பகலில் அவற்றை அட்டவணைப்படுத்துவர். பிக்கெரிங் இந்த நீண்ட கால அட்டவணைத் திட்டத்தினை உருவாக்கினார். இத்திட்டத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக்கையில் விண்மீன்களின் வகைப்பாட்டுக்கான ஒளியியல் கதிர்நிரல்களைப் பெற்று அவற்றைக் கொண்டு கதிர்நிரலால் விண்மீன்களை வகைப்படுத்தி சுட்டி (Index) உருவாக்குவர். இதில் அளவீடுகள் எடுப்பதே அரிது. அதைவிட அரியது அறிவார்ந்த வகைப்பாட்டை உருவாக்குவதாகும்.

டிரேப்பர் அட்டவணைப்பணி தொடங்கிய சில காலத்துக்குள்ளேயே விண்மீன்களை வகைப்படுதுவதில் கருத்து வேறுபாடு உருவாகி விட்டது. முதலில் நெட்டி பரார் பகுப்பாய்வைத் தொடங்கினார். ஆனால் சில மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள இப்பணியைவிட்டு விலகினார். எனவே இப்பணி என்றி டிரேப்பரின் உறவினரான அந்தோணியோ மௌரியிடம் விடப்பட்டது. இவர் சிக்கலான வகைபாட்டு முறையைக் கடைபிடிக்க விரும்பினார். இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டுவந்த வில்லியமினா பிளெமிங் மிகவும் எளிய நேரடியான முறையை விரும்பினார். கெனான் இருவருக்கும் இடையில் சந்துசெய்வித்து பொலிவுமிக்க தென் அரைக்கோள விண்மீன்களை ஆயத் தொடங்கினார். இவற்றுடன் இவர் ஒரு மூன்றாம் அமைப்பைப் பயன்படுத்தினார். இம்மூன்றாம் முறை விண்மீன்களை O, B, A, F, G, K, M எனும் கதிர்நிரல் சார்ந்த வகுப்புகளாகப் பிரிப்பதாகும். இவரது முறை பால்மர் உட்கவர் வரிகளின் வலிமையைப் பொறுத்தது. உடுக்கண வெப்பநிலைகளில் உட்கவர் வரிகளைப் புரிந்துகொண்டதும் இவரது வகைபாட்டு அமைப்பு, அண்மைய விண்மீன் பட்டியல்களைத் தவிர்க்க, மீள்வரிசை படுத்தப்பட்டது. கெனான் இதற்காக விண்மீன் வகைப்பாட்டை எளிதாக நினைவுகொள்ள, “Oh Be a Fine Girl, Kiss Me” என்ற நினைவியை உருவாக்கினார். கெனான் தனது முதல் உடுக்கணக் கதிர்நிரல்களை 1901ல் வெளியிட்டார்.

வெறும் இல்லக்கிழத்திகளாக வாழாமல் ’’வரம்பு மீறி’’ வேலை செய்வதற்காக முதலில் கண்டிக்கப் பட்டனர். இத்துறையில் பெண்கள் உதவியாளராக மட்டுமே உயர முடியும். மேலும் அவர்களுக்கு வாரத்தில் ஆறுநாட்களும் நாளுக்கு ஏழுமணிநேர வேலையும் மணிக்கு 25 செண்டு பணமும் மட்டுமே தரப்படும். ஆனால் கெனான் இத்துறையில் தனது ஈடிணையற்ற பொறுமையாலும் உழைப்பாலும் தன்னிகரற்று வளர்ந்தார். ஏன், அவர் வான்காணக ஆடவருக்கே பல உதவிகள் புரிந்து நல்ல பெயருடன் திகழ்ந்தார். இவர் தரகு பங்களிப்புக்கும் உலகளவில் தூதரைப் போல ஆடவர்களிடையே சாதனப் பரிமாற்றங்களுக்கும் துணை நல்கினார். இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். 1933ல் சிகாகோவில் நடந்த உலக விழாவில் தொழில்முறைப் பெண்களுக்கான பேராளராகக் கலந்துக் கொண்டார்.

கெனானின் உறுதிப்பாடும் கடுமையான உழைப்பும் பெரும்பயனைத் தந்தன. அவர் வேறு எவருமே தம் வாழ்நளில் செய்திராத அளவுக்கு அதாவது 5,00,000 விண்மீன்களை வகைப்படுத்தினார். மேலும் அவர் 300 மாறுபடும் விண்மீன்களையும் ஐந்து வளிம ஒண்முகில்களையும், ஒரு கதிர்நிரல் இரும விண்மீனையும் கண்டுபிடித்தார். 2,00,000 மேற்கோள்கள் அடங்கிய நூல்தொகை ஒன்றையும் உருவாக்கினார். அவற்றின் கதிர்நிரல் அமைவைப் பார்த்தே மூன்று விண்மீன்களை ஒரு மணித்துளிக்குள் வகைப்படுத்திவிடுவாராம். உருப்பெருக்காடியைப் பயன்படுத்தினால் கண்ணால் பார்க்கும் பொலிவை விட 16 மடங்கு மங்கிய, அதாவது பொலிவெண் 9 அளவுக்கு மங்கிய, விண்மீன்களைக் கூட வல்லமையைப் பெற்றிருந்துள்ளார்.

பன்னாட்டு வானியல் ஒன்றியம் மே 9. 1922ல் கெனானின் விண்மீன் வகைப்பாட்டு முறையை ஒரு சில மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றியது. அது இன்றும் கூட விண்மீன் வகைபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவரோடு கூட ஆய்வு செய்த வானியலாளர் செசில்லா பேய்ன் கெனானின் தரவுகளைப் பயன்படுத்தி பெரும்பாலான விண்மீன்கள் நீரகத்தாலும் எல்லியத்தாலும் அகியவை என நிறுவினார். கெனான் 1940ல் அவர் ஓய்வு பெறும்வரை வானியலில் 40 ஆண்டுகள் பணியாற்றினார். இக்காலத்தில் அறிவியல் சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஏற்கப்படவும் முன்னேறவும் பெருமை பெறவும் பெரிதும் பாடுபட்டார். இவரது அமைதியான கடுமையான உழைப்பும் பண்பும் பாங்கும் அவரது வாழ்நாள் முழுவதும் உதவியதோடு வானியலில் பெண்கள் முன்னேறும் வழித்தடத்தையும் சமைத்தது. நிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் கெனான் குழிப்பள்ளம் எனப்படுகிறது.

வானியலில் சிறந்த பணிபுரியும் பெண்வானியலாளருக்கு அமெரிக்க வானியல் கழகம் ஒவ்வோராண்டும் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருதை வழங்கி வருகிறது. ஆணோ பெண்ணோ வேறு எவரையும் விட பேரளவில் கிட்ட்த்தட்ட 3,00,000 விண்மீன்களை வகைப்படுத்தியதற்காக ’’வான்தொகைக் கணக்கெடுப்பவர்’’ எனச் செல்லப்பெயரிடப்பட்டுள்ளார். இவரது பெயரில் ஒவ்வோராண்டும் 1934 முதல் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது வட அமெரிக்கப் பெண் வானியலாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இவர் பெயரால் தெலாவேர் பல்கலைக்கழகத்தின் உறைவிட முற்றமொன்று கெனான் முற்றம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. டொனான்சிந்திலா வான்காணகம் அருகில் உள்ள மெக்சிகோ பியேபுலா டொனான்சிந்திலாவில் உள்ள ஒரு தெரு ’’பெண்மணி ஆன்னி ஜம்ப் கெனான்’’ தெரு என அழைக்கப்படுகிறது. வெப்பநிலைசார்ந்த முதல் சீரிய விண்மீன்களின் வகைப்பாட்டு முறையை உருவாக்கிய கெனான் ஏப்ரல் 13, 1941ல் தனது 77வது அகவையில் மசாசூசட், கேம்பிரிட்ஜில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com