Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் 75,534 விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 75,534 விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி..

by ஆசிரியர்

பிரதமரின் கிசான் சம்மான் நிதி  திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் 75 ஆயிரத்து 534 சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு அடையாளமாக 165 விவசாயிகளுக்கு உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆணை வழங்கினார். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது: 5 ஏக்கருக்கு குறைவான விவசாயம் செய்யக்கூடிய நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகை வழங்குவதற்கு அடையாளமாக  165 விவசாயிகளுக்கு இந்த ஆணை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை 3 தவணைகளில் தலா ரூ.2  ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான பணிகள் வேளாண், வருவாய் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி மாவட்டத்தில் 75 ஆயிரத்து 534 சிறு, குறு விவசாயிகளின் விவரங்கள்  கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகளை சேர்க்கும் வகையில் இன்று முதல் (பிப் 25) 26, 27ல் சிறப்பு முகாம்கள் அனைத்து வருவாய் கிராமங்கள், கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தகுதியான விவசாயிகள் தங்கள் பெயர், வயது, பாலினம், வகுப்பு, ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி கோடு, குடும்ப அட்டை எண், கைபேசி எண், விவசாய நில பட்டா, சிட்டா நகல் ஆகிய விபரங்களுடன் வட்டாட்சியர் அலுவலகங்கள் பரமக்குடி, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பேசினார். உத்திரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற பிரதமரின் கிசான் சம்மான்  நிதி திட்டம் துவக்க விழா பாரத பிரதமரின் உரை உள்ளிட்டவை விவசாயிகளுக்கு  நேரலையாக திரையிடப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) எல்.சொர்ணமாணிக்கம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சி.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷேக்அப்துல்லா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிஷோர்குமார், வேளாண் அறிவியல் நிலைய திட்ட  ஒருங்கிணைப்பாளர் கவிதா, ராமநாதபுரம் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சங்கர்  நாராயணன் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com