கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கீழக்கரை ‘சட்ட விழிப்புணர்வு இயக்கம்’ சார்பாக 65 க்கும் மேற்பட்ட சட்டப் போராளிகள் மனு செய்திருந்தனர்.
அதே போல் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கீழக்கரை தாலுகா அலுவலக அதிகாரிகள் சம்பந்தமாக புகார் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜராகி மனுதாரர்கள் விளக்கமளிக்க அழைப்பு தரப்பட்டு இருந்தது. இதனையடுத்து நேற்று 09.05.2018 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் திரு ரெ.சுமன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரான சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சட்டப் போராளிகள், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் இல்லாதது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்கு செய்யப்பட்ட புகார் மனு மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் வருவாய் கோட்டாட்சியரிடம் கீழக்கரை தாலுகா அலுவலக அதிகாரிகள் குறித்து பின் வரும் குற்றச்சாட்டுக்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்து விளக்கமான மனு அளித்துள்ளனர். அதன் சாராம்சம் பின்வருமாறு :
மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் :
1. கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் பணிக்கு காலை 11 மணிக்கு மேல் மிக தாமதமாக அலுவலகத்திற்கு வருகின்றனர்.
2. வேலை நேரத்தில் அதிகாரிகள், தங்கள் இருக்கைகளில் அரை மணி நேரம் கூட அமர்ந்து பணி செய்வது இல்லை.
3. வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பணி நேரங்களில் எங்கு இருக்கின்றனர் என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை.
4. இளநிலை அதிகாரிகள், கணக்காளர்கள் மற்றும் உதவியாளர்கள் அலுவலக வேலை நேரங்களில் அலுவலகத்தில் பணி செய்யாமல், சொந்த வேலைகளை செய்ய வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.
5. பல்வேறு அரசு சான்றிதழ்கள் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்காக கீழக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம ஊராட்சிகளில் இருந்து கீழக்கரை தாலுகா அலுவலகம் வரும் பாமர மக்கள் நாள்தோறும் அலைக்கழிக்கப்பட்டு சொல்லொண்ணா துயரம் அடைந்து வருகின்றனர்.
6. கீழக்கரை தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்களின் கோரிக்கைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கனிவுடன் விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கில் செயல்படுகின்றனர்.
மனுதாரர்களின் கோரிக்கைகள் :
1. கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் வேலை நேரத்தில் தாலுகா அதிகாரிகள் அனைவரும் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் வருகை பதிவினை பொருத்த வேண்டும்.
2. அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றுவதை கண்காணிக்க தாலுகா அலுவலகத்தில் முப்பரிமாண CCTV கேமரா அமைக்க வேண்டும்.
3. அலுவலக வேலை நேரங்களில், தாலுகா வேலை காரணமாக வெளியே செல்லும் இளநிலை அலுவலர்களை கண்காணிக்க உரிய பதிவேட்டில் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதற்கான காரணத்தை பதிவதற்கு உத்தரவிட வேண்டும்.
4. கீழக்கரை தாலுகாவில் களப் பணிகள் மற்றும் சிறப்பு தளப் பணிகள் ஆற்றுவதற்காக அலுவக வேலை நேரங்களில் வெளியே செல்லும் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் உரிய அறிவிப்புப் பலகையில், தான் வெளியே செல்வதற்கான காரணம், தாலுகா அலுவலகத்திற்கு திரும்பி வரும் நேரம் குறித்து அறிவிப்பு செய்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
5. கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களை, அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத வண்ணம், உரிய அதிகாரிகள் கனிவுடன் விசாரித்து, சரியான வழிமுறைகளை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, தாலுகா அலுவலக புரோக்கர்களிடம் ஏமாறுவதில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.
அதே போல் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில், திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, வேலை நேரத்தில் பணியில் இல்லாத அதிகாரிகளை கண்டறிந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உரிய விசாரணை செய்து பொதுமக்களின் மன உளைச்சலை போக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் உச்ச நீதிமன்ற வழக்கு எண் 6237/1990 தீர்ப்பு நாள் : 05.11.1993 லக்னோ வளர்ச்சி அதிகாரக் குழு -Vs- M.K.குப்தா என்பவர் வழக்கில் ‘ஒரு அரசாங்க பணிக்கு யார் பொறுப்பு’ என்பதனை சட்டப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகவே மரியாதைக்குரிய வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பொதுநலன் சார்ந்த இந்த மனு மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
You must be logged in to post a comment.