இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி ஆந்திராவில் சிக்கினார்..

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலியைச் சேர்ந்த ஜோதிடர் சிவசங்கர பாண்டியன் டிச., 6 காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். இதையறிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைந்து உள்ளே புகுந்கு, பீரோவில் இருந்த 13 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு, ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றார். அப்போது வீடு திரும்ய சிவ சங்கரபாண்டியனை அந்த மர்ம நபர் அரிவாளை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால் அச்சமடைந்து வெளியே வந்த சிவ சங்கரபாண்டியன் சத்தமிட்டதை அறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். திருடிய பொருட்களுடன் தப்ப முயன்ற மர்ம நபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் படுகாயமடைந்த மர்ம நபரை ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சந்தோஷ் குமார் 28 என தெரியவந்ததை படுத்து அந்த வாலிபரை கைது செய்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த சந்தோஷ்குமார் டிச.7 அதிகாலை சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறிச் சென்று கழிப்பறை ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  தொண்டி போலீஸ் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுல்தான் இப்ராஹீம் போலீஸ்காரர்கள் திருப்பாலைக்குடிகாகிதமூர்த்தி, ஆர்.எஸ்.மங்கலம் பாலமுருகன், முத்துராமலிங்கம் ஆகியோர் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சஸ்பெண்ட் செய்தார்.

தப்பி ஓடிய சந்தோஷ்குமாரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டது. சார்பு ஆய்வாளர் தாஸ், ஏட்டு செல்லதுரை, போலீஸ்காரர்கள் ராஜ்குமார், ராஜேஷ் உள்பட 8 பேர் தனிப்படை சந்தோஷ்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். சென்னை வியாசர்பாடியில் இந்த தனிப்படை விசாரித்ததில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தடா கிராமத்தில் சந்தோஷ்குமார் பதுங்கி இருப்பதாக தெரிந்தது. இதன்படி அங்கு தனிப்படை தன்னை தேடி வருவதை கூட்டாளிகள் மூலம் அறிந்த சந்தோஷ்குமார் ஆந்திர – தமிழகம் எல்லையான ஆரணி காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கினார். துரிதமாக செயல்பட்ட தனிப்படையினர் சந்தோஷ் குமாரை நேற்று காலை கைது செய்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்