Home செய்திகள் தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கா அவமதிப்பு?-வைகோ கண்டனம்!

தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கா அவமதிப்பு?-வைகோ கண்டனம்!

by Askar

தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கா அவமதிப்பு?-வைகோ கண்டனம்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு என்று ஒரு தனி வரலாறு இருக்கின்றது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கொடையாக வழங்கிய இச்சிலை, 1968 ஜனவரி 2 ஆம் நாள், நீதிக்கட்சியின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆற்காடு சர்.ஏ.இராமசாமி முதலியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மண்டைக் கொழுப்பு ஏறிய ஒருவர், தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவை இழிவு படுத்தும் விதமாக, அண்ணா சிலையின் தலைப்பகுதியை ‘கொரோனா வைரஸ்’ ஆக மாற்றி, தீட்டிய கேலிச் சித்திரம் (20.04.2020) தினத்தந்தி ஏட்டில் வெளியானது நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்று பனம்பாரனார் தொல்காப்பியத்தில் பாடிப் போற்றிய இம்மண்ணுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டி அழியாப் புகழ் சரித்திரத்தைப் படைத்தவர் பேரறிஞர் அண்ணா.

“தனது அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்று அறிவித்து, சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்ததும், இந்திக்கு இங்கு இடமில்லை; இருமொழிக் கொள்கைதான் எங்கள் இலட்சியம் என்பதையும் உறுதியாக நிலைநாட்டிய பெருமை அண்ணா அவர்களுக்கு உண்டு.

விடுதலை பெற்ற இந்தியாவில், முதன் முதலில் மாநில சுயாட்சிச் சுடரை ஏந்திப் பிடித்து உரிமை முழக்கமிட்ட பெருமையும் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.

மாளிகையிலிருந்த அரசியலை மண் குடிசைக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் மக்களாட்சித் தத்துவத்திற்கு மகுடம் சூட்டியதும் அண்ணாதான். ஏழை எளிய, சாதாரண மக்கள் வாழ்வில் ஒளியேற்ற ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்றிய அண்ணா, குறுகிய காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், எந்த சக்தியாலும் செய்ய முடியாத சாதனைச் சரித்திரத்தைப் படைத்துவிட்டு மறைந்தார்.

தமிழ் மக்களின் நெஞ்சத்தில் காலமெல்லாம் வாழும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களை ஏற்றிப் போற்றியவர் தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள் என்பது நஞ்சினை தூரிகையில் தோய்த்து கருத்துப் படம் வரைந்த மனிதனுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.

தினத்தந்தி நாளேட்டின் நிர்வாக இயக்குநர் திரு பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் அவர்கள், தினத்தந்தியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் ‘குறுமதி’யாளர்களை இனம் கண்டு, தினத்தந்தி ஏட்டின் மாண்பையும், மரபையும் கட்டிக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க ‘தாயகம்’ சென்னை – 8 22.04.2020

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com