கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு ..

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் ஒன்றரை வயது ஆண் குழந்தையை போலீஸார் மீட்டனர்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததாம்.  அதையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லா பாய் தலைமையில் சென்று அங்கிருந்த சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாகவும், அதனால் பெற்றோர் குழந்தையை விட்டுச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், குழந்தை தற்போது பாதுகாப்பாக அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும், குழந்தையை யார் கோயில் வளாகத்தில் விட்டுச் சென்றிருப்பார்கள் என்பதை அறியும் பொருட்டு கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பின்பு தெரியவரும் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.  இருந்தபோதும், குழந்தைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக அடைக்கலாபுரம் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.