Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி; கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..

தென்காசி மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி; கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..

by mohan

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையில் ஈஸ்டர் பண்டிகை உள்ளது.இந்த பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி வீதிகளில் பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஜெருசேலம் நகரில் பவனி வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்றதுடன் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கியதை நினைவு கூறுவதே இந்த குருத்தோலை ஞாயிறு தினத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்களின் முக்கிய வழிபாடான குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் கையில் குருத்தோலை ஏந்தி பாடல் பாடிய நிலையில் மக்கள் முக்கிய வீதிகள் வழியே சென்றனர். தென்காசி மிக்கேல் அதிதூதர் ஆலயம், சிஎஸ்ஐ சர்ச் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். ஆலங்குளம் பகுதியில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடந்தது. இதையொட்டி ஆலங்குளம், நல்லூர், அடைக்கல பட்டணம், ஊத்துமலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளால் செய்யப்பட்ட சிலுவைகளை கையில் ஏந்திய படி ஓசன்னா பாடல் பாடி வீதிகள் வழியாக சென்றனர். கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறையொட்டி பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளை கைகளில் ஏந்திய வண்ணம் பாடல்கள் பாடி முக்கிய வீதிகளில் பவனியாக சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் கிறிஸ்து ஆலய சேகர குரு டேனியல் தனசன், புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அதேபோன்று சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதையொட்டி சிவகிரி லூர்து அன்னை ஆலயம், வாசுதேவநல்லூர் புனித சூசையப்பர் ஆலயம், உள்ளார் ஆரோக்கிய அன்னை மேரி ஆலயம், சண்முகநாதபுரம் புனித சவேரியார் ஆலயம், சரவணாபுரம் புனித அந்தோணியார் ஆலயம், ராமநாதபுரம் புனித சகாயமேரி ஆலயம், நாரணபுரம் புனித லூர்து மாதா ஆலயம், சங்கனாப்பேரி புனித இன்னாசியார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகளும் நடைபெற்றது. தேவிபட்டணம் பகுதியில் குழந்தை திரேசா ஆலயத்தில் பங்குத்தந்தை அருள் அலெக்சாண்டர் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!