Home செய்திகள் பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் “இன்பத்தமிழை போற்றுவோம்” இணையவழி கவியரங்கம்;கவிஞர் பேரா அறிவிப்பு..

பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் “இன்பத்தமிழை போற்றுவோம்” இணையவழி கவியரங்கம்;கவிஞர் பேரா அறிவிப்பு..

by mohan

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 21-அன்று “இன்பத்தமிழை போற்றுவோம்”எனும் தலைப்பில் இணைய வழிக் கவியரங்க நிகழ்ச்சியை நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தெரிவித்திருப்பதாவது: “தாய்மொழிகளின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் உலகெங்கிலும் உள்ள மொழி,பண்பாட்டுக் கலாச்சார மரபுகள் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய கூறுகளை அறிந்துகொள்ளவும், பல்வேறு மொழி பேசும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் நாளைத் தாய்மொழி நாளாகக் கடைபிடிக்க உலக நாடுகளுக்கு யுனஸ்கோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தாய்மொழியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தவும், தாய்மொழியில் தகவல் தொடர்புப் புலமைத் திறத்தை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாளில் “தாய்மொழி நாள் விழா” கொண்டாடப்பட்டு வருகிறது.பொதிகைத் தமிழ்ச் சங்கமும் ஆண்டுதோறும் விழாக்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 21- அன்று பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக இணையவழியில் கவியரங்கம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் துபாயில் குடியிருந்து வரும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனரும்,தமிழ் ஆர்வலருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தொடக்கவுரையாற்றி, கவியரங்கினைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா என்ற பே.இராஜேந்திரன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. “இன்பத் தமிழைப் போற்றுவோம் என்ற பொதுத் தலைப்பில்,உயிராய்,உயர்வாய், இதயமாய்,இமயமாய்” என்ற துணைத் தலைப்புகளில் ஜெர்மனி நாட்டிலிருந்து கவிஞர் ஜோசபின் ரம்யா, இலங்கையிலிருந்து கவிஞர் பரமசிவம் இந்துஜா,தமிழ்நாடு கூடலூரைச் சேர்ந்த கவிஞர் கு.நிருபன் குமார்,தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நா.நாகராஜ் ஆகியோர் கவிதை வாசிக்க உள்ளனர். ஜூம் செயலி மூலம் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கூட்ட அடையாள எண்: 874 099 5990, நுழைவு எண் 333543 வழியாக கலந்து கொள்ளலாம். கலந்து கொள்வோருக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்”இவ்வாறு கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!