Home செய்திகள் நெல்லையில் வரலாற்று சிறப்புமிக்க கண்காட்சி; அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் துவக்கி வைத்தார்..

நெல்லையில் வரலாற்று சிறப்புமிக்க கண்காட்சி; அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் துவக்கி வைத்தார்..

by mohan

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பிப்ரவரி மாத சிறப்பு காட்சிப் பொருள்- கண்காட்சி திங்கள் கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்புமிக்க கண்காட்சியை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் நாட்டிய முத்திரையும் மகிழ்ச்சியில் நடனமாடும் நர்த்தன கணேசரின் மரச்சிற்பம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க அரிய பொருட்கள் உள்ளன. அத்துணை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளை பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு மாதம் முழுவதும் இந்தப் பொருள் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருள்களின் முக்கியத்துவத்தை நெல்லை மாவட்ட மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சி தான் இந்த சிறப்பு கண்காட்சி. 07.02.2022 திங்கள் கிழமை துவங்கப்பட்ட இக்கண்காட்சியில் இடம் பெற்ற அரும்பொருள் “நர்த்தன கணேசர் மரச் சிற்பம்” இந்த கண்காட்சி குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி குறிப்பிடுகையில், மரச்சிற்பங்களில் மிகவும் முக்கியமான நர்த்தன கணேசர் சிற்ப இம்மாத சிறப்பு காட்சிப் பொருளாக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. நாட்டிய முத்திரையும் மகிழ்ச்சியில் நடனமாடும் கணேசரின் மரசிற்பம் எழில் நிறைந்தது. சிற்பியின் உளி விளையாடியுள்ளது நான்கு கரங்களுடன் நர்த்தனமாடும் கணேசரின் மேலிரு கரங்களில் வலது கரத்தில் சிவனின் மழுவும், இடது கரம் பாசக்கயிற்றை விரல் நுனியில் பிடித்த நிலையிலும், கீழ் இரு கரங்களில் வலது கரம் ஒடிந்த தந்தம், இடது கரம் பழத்தை உள்ளங்கையில் ஏந்தி அதை தும்பிக்கையில் ஏந்திய நிலையில் உள்ளது. வலது காலைத் தூக்கி ஆடும் பொழுது அதன் அடியில் அவரது வாகனமான மூஞ்சூறு நுழைந்து நிற்கின்றது. இருபுறமும் இரு தேவர்கள் சாரத்தை தூக்கி பிடித்த நிலையில் பின்புறம் மலர்கள் வளைந்து செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. தலையில் அகண்ட மகுடம் உள்ளது. ராஜசிங்கமங்கலத்தில் எரிந்த நிலையில் இருந்த தேரில் இருந்து எடுக்கப்பட்ட இந்த நர்த்தன கணேசன் மரச்சிற்பம் கிபி பதினெட்டாம் நூற்றாண்டின் கலை வடிவமாகும். நமது முன்னோர்கள் கலை சிறப்பினை இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே இக்கண்காட்சியின் நோக்கமாகும் என இக் கண்காட்சியை துவங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார். இக்கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என பலர் பார்வையிட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!