Home செய்திகள் நெல்லையில் உலகத் தாய்மொழி தின கவிதைப் போட்டி; தமிழக கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க அழைப்பு..

நெல்லையில் உலகத் தாய்மொழி தின கவிதைப் போட்டி; தமிழக கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க அழைப்பு..

by mohan

தாய்மொழிகளின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் உலகெங்கிலும் உள்ள மொழி,பண்பாட்டுக் கலாச்சார மரபுகள் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய கூறுகளை அறிந்து கொள்ளவும் பல்வேறு மொழி பேசும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் நாளைத் தாய்மொழி நாளாகக் கடைபிடிக்க உலக நாடுகளுக்கு யுனஸ்கோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இவற்றின்படி,நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தாய்மொழியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தவும் தாய்மொழியில் தகவல் தொடர்புப் புலமைத் திறத்தை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாளில் “தாய்மொழி நாள் விழா” கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை அரசு அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து உலகத் தாய்மொழி நாள் சிறப்புக் கவிதை போட்டியினை தமிழ்நாடு அளவில் நடத்துகிறது. இந்தப் போட்டி தாய்மொழியாம் தமிழின் பன்முகத் தன்மைகளையும், மொழியின் சிறப்புக்களையும் இளையதலைமுறையினர் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக கல்லூரி மாணவ மாணவிகளுக்காக மாநில அளவில் நடத்தப்படுகிறது. இந்த கவிதைப் போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் படித்துவரும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.”யாதும் தமிழே “என்ற தலைப்பில் 24- வரிகளில் கவிதை எழுதி அனுப்பி வைக்க வேண்டும். கவிதைகள், தமிழின் பன்முகத் தன்மையை எடுத்துக் காட்டுவதாகவும், தமிழின் சிறப்புக்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். கவிதைகள் மரபுக்கவிதை,புதுக் கவிதை எந்த வகையாகவும் இருக்கலாம். கைப்பட எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிதையுடன் தங்களுடைய பெயர்,கல்லூரி பெயர்,ஊர்,மாவட்டம் மற்றும் அலைபேசி (புலன)எண் ஆகிய விபரங்களுடன் பிப்ரவரி 15 க்குள் கீழ்க்காணும் முகவரிக்குக் கிடைக்கும் படியாக அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். கவிதைகள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: மாவட்டக் காப்பாட்சியர்,அரசுஅருங்காட்சியகம்,பாளையங்கோட்டை,திருநெல்வேலி-627002. தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கவிதைகளுக்கு முறையே முதல் பரிசாக ரூபாய் மூவாயிரம், இரண்டாம் பரிசாக ரூபாய் இரண்டாயிரம், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரம் என ரொக்கப் பரிசுகளாக வழங்கப்படும். அத்துடன் வெற்றி பெற்றதற்கான பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகள் தொடர்பாக எந்த விதமான கடிதத் தொடர்போ, தொலைபேசித் தொடர்போ கூடாது. பரிசுகள்,தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல் நிறைவு பெற்றபின் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வைத்து வழங்கப்படும். நிகழ்ச்சிக்கான நாளும்,நேரமும் முறையாக அறிவிக்கப்படும். இவ்வாறு நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!