Home செய்திகள் கடையத்தில் தோண்ட தோண்ட முதுமக்கள் தாழிகள்;இரவோடு இரவாக முதுமக்கள் தாழிகளை உடைத்து சூறையாடிய மர்ம கும்பல்..

கடையத்தில் தோண்ட தோண்ட முதுமக்கள் தாழிகள்;இரவோடு இரவாக முதுமக்கள் தாழிகளை உடைத்து சூறையாடிய மர்ம கும்பல்..

by mohan

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஜம்புநதிக்கரையில் தெற்கு கடையம் பஞ்சாயத்துக்குட்பட்ட குப்பைகள் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மண்புழு தயாரிப்பு தொட்டிகள் அமைப்பதற்காக 3 ராட்சத குழிகள் தோண்டப்பட்டன. அப்போது குழியின் உள்ளே ஆழத்தில் ஆங்காங்கே பல்வேறு அளவுகளில் பானைகள் போன்ற அமைப்புகள் தென்பட்டன. தோண்ட தோண்ட முதுமக்கள் தாழிகள் வெளிவந்து கொண்டே இருப்பதால் இப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டம் கூட்டமாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இந்த இடத்தை வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இதுகுறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் ஒளிபரப்பாகின. மேலும் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து தொல்பொருள் துறை மூலம் அகழாய்வு நடத்த மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக ஒரு மர்மகும்பல் குப்பை கிடங்கிற்குள் புகுந்து முதுமக்கள் தாழிகளை உடைத்து சூறையாடி சென்று விட்டனர். முதுமக்கள் தாழிகளில் பண்டைய காலத்து மக்கள் ஆபரணங்களையும், விலை உயர்ந்த கற்கள், பவளங்களை போட்டு வைப்பார்கள் என்ற தகவல்களின் அடிப்படையில் முதுமக்கள் தாழிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. முதுமக்கள் தாழிகள் கிடைத்த இடத்தின் அருகிலேயே தமிழி எழுத்துக்களால் ஆன மிகப்பெரிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இந்த கல்வெட்டை முழுவதுமாக படித்து விட்டால் பாறை இரண்டாக பிளந்து புதையல் வெளிப்படும் என்ற செவிவழிக் கதைகளும் இப்பகுதில் பல காலமாகவே சொல்லப்படுவதுண்டு. எனவே புதையல்கள் கிடைக்கக்கூடும் என்பதாலேயே மர்மகும்பல் இரவில் புகுந்து தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சில சேதமடையாத பானைகளையும் இந்த இடத்தில் இருந்து மர்ம கும்பல் களவாடியும் சென்றிருப்பதற்கான தடயங்களும் இருக்கின்றன. எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக இப்பகுதியை கைவசப்படுத்தி அகழாய்வை தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!