Home செய்திகள்உலக செய்திகள் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய, இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று (ஜனவரி 30, 1948).

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய, இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று (ஜனவரி 30, 1948).

by mohan

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi) அக்டோபர் 2, 1869ல் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர். ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவதாஸ் (1890). மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார். பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லாஹ் கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.

தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார். 1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர்.

தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார். ஜனவரி 9, 1915ல் மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார். அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி – கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், ஜனவரி 12, 1915 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். 1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார். பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது. காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார். காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார். அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார். காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே, அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின. அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார். காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!